தற்போதைய செய்திகள்

தி.மு.க.வை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் – அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி

திருவாரூர்

ஸ்டாலின் பொய்யாக பேசி திரிவதால் தி.மு.க.வை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருவாரூரில் 7-ந்தேதி நடைபெற உள்ள தனியார் வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் ஆர்.காமராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கடந்த ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் கொரோனா நிவாரணமாக 5.36 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கி உள்ளது. அதுவும் முன்னுரிமை பெற்ற குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் ஏ.ஏ.ஒய். குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. இவை அனைத்தும் நியாயவிலை கடைகளில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் மூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை இல்லாமல் முன்னுரிமை இல்லாத குடும்ப அட்டைகளுக்கு ரூ.438 கோடி பணம் செலுத்தி 1.99 லட்சம் மெட்ரிக் டன் அரிசி தமிழக அரசால் வாங்கப்பட்டு அனைவருக்கும் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின் யாரோ எழுதிக் கொடுப்பதை பேசுவது தவறு. அனைத்தையும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க தயாராக உள்ளோம். அரிசியை தனியாரிடம் முறைகேடாக விற்றதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டை நிரூபிக்க அவர் தயாராக உள்ளாரா? வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற ரீதியில் ஸ்டாலின் பொய்யாக பேசி திரிகிறார். திமுகவிற்கு ஏற்கனவே மக்கள் ஆதரவு அளிக்க விரும்பவில்லை. இதுபோன்ற நடவடிக்கைகளால் திமுகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.