தற்போதைய செய்திகள்

கழுகுமலை பேரூராட்சி பகுதிகளில் தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் – அதிகாரிகளுக்கு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ உத்தரவு

தூத்துக்குடி

கழுகுமலை ேபரூராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் தட்டுப்பாடின்றி சீராக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை பேரூராட்சியில் சீரான குடிநீர் வழங்குதல் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசியதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை பேரூராட்சி பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் வழங்கப்படும் குடிநீர் சீராக அனைத்து பகுதிகளுக்கும் பற்றாக்குறையின்றி வழங்க வேண்டும். வல்லாறைவென்றான் கண்மாய் பகுதியில் கிணறு அமைக்கும் பணிகளையும், பைப்லைன் அமைக்கும் பணிகளையும் விரைவுப்படுத்தி விரைவில் குடிநீர் வழங்க ஆவன செய்ய வேண்டும். குடிநீர் நீரேற்று பகுதியில் மின்சார வாரியத்தின் மூலம் குறைவழுத்த மின்சாரத்தினை சரியான அளவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

15-வது வார்டு மகாலட்சுமிநகர், நடுத்தெரு, ஆறுமுகம் நகர், ஏ.பி.சி.நகர், அண்ணா புதுத்தெரு, குறுக்குத்தெரு, 6-வது வார்டு பாலசுப்பிரமணியன்தெரு, மேலத்தெரு, பி.எஸ்.என்.எல். அலுவலக சாலை, பாபாநகர் ரோடு ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் பேவர் பிளாக் சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலும் கழுகுமலை பகுதிகளில் தெருவிளக்குகள் இல்லாத பகுதிகளில் தெருவிளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசினார்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் செந்தூர்பாண்டியன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் விக்னேஷ், வட்டாட்சியர்கள் பாஸ்கரன், மணிகண்டன், கழுகுமலை பேரூராட்சி செயல் அலுவலர் முருகன், உதவி செயற்பொறியாளர் மணிகண்டன், உதவி பொறியாளர் அன்னம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், சசிகுமார், முக்கிய பிரமுகர்கள் வினோபாஜி, விஜயபாண்டியன், குருராஜ், முத்துராஜ், செல்வகுமார், கருப்பசாமி, முத்தையா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.