தற்போதைய செய்திகள்

தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியில் ரூ.3.66 கோடியில் புதிய மாணவர் விடுதி – அமைச்சர் கே.பி.அன்பழகன் பூமிபூஜை

தருமபுரி

தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியில் ரூ.3.66 கோடி மதிப்பீட்டில் புதிய மாணவர் விடுதி அமைக்கும் பணியை அமைச்சர் கே.பி.அன்பழகன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

தருமபுரி வட்டம் அதகப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி, நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி, செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில் ரூ.6.63 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறை, கழிவறை, மாணவர் விடுதி கட்டடம் கட்டுதல் என 3 புதிய திட்டப்பணிகளை உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.பி.கார்த்திகா தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

தருமபுரி வட்டம் அதகப்பாடி அரசு மேல்நிலை பள்ளியில் நபார்டு நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.1.66 கோடி மதிப்பில் 4 வகுப்பறை கட்டடம், 1 அறிவியல் ஆய்வக கட்டடம், 2 ஆண்கள் கழிவறை கட்டடம், 2 பெண்கள் கழிவறை கட்டடம், குடிநீர் வசதி அமைப்பு மற்றும் 350 மீ சுற்றுச் சுவர் கட்டும் பணிகளும், நல்லம்பள்ளி வட்டம், நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் நபார்டு நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.1.31 கோடி மதிப்பில் 5 வகுப்பறை கட்டடம், 1 ஆண்கள் கழிவறை கட்டடம், 1 பெண்கள் கழிவறை கட்டடம், குடிநீர் வசதி அமைப்பு மற்றும் 500மீ சுற்றுச் சுவர் கட்டும் பணிகளும், தருமபுரி வட்டம், செட்டிக்கரையில் ரூ.3.66 கோடி மதிப்பில் அரசு பொறியியல் கல்லூரியில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கான (100 மாணவர்கள்) புதிய விடுதி கட்டடம் கட்டும் பணி என மொத்தம் ரூ.6.63 கோடி மதிப்பில் 3 புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைக்கப்படுகிறது.

தமிழக அரசு மக்களின் அடிப்படை தேவைகளை கண்டறிந்து பூர்த்தி செய்யும் வகையில் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இப்பணிகள் விரைவில் நிறைவு பெற்று மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்கு வரும்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

இவ்விழாவில் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி, மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தலைவர் டி.ஆர்.அன்பழகன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், ஒன்றியக்குழுத்தலைவர் நீலாபுரம் செல்வம், மத்தியக் கூட்டுறவு வங்கி இயக்குநர்கள் என்.ஜி.சிவபிரகாசம், பெரியண்ணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அ.அய்யப்பன், மாவட்ட நுகர்வோர் மொத்த விற்பனை பண்டக சாலை தலைவர் பூக்கடை பெ.ரவி, மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணி, கூட்டுறவு ஒன்றிய துணைத் தலைவர் பொன்னுவேல், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் பூக்கடை முனுசாமி, கூட்டுறவு சங்கத்தலைவர்கள் ஆறுமுகம் பழனிசாமி, அங்குராஜ், வட்டாட்சியர்கள் ரமேஷ். சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் வடிவேலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.