தற்போதைய செய்திகள்

ஸ்டாலினிடம் எந்த தகுதியும் இல்லை – வி.வி.ராஜன்செல்லப்பா கடும் தாக்கு

மதுரை

ஸ்டாலின் நல்லவரும் கிடையாது, வல்லவரும் கிடையாது. அவரிடம் எந்த தகுதியும் இல்லை என்று மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார்.

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள மதுரை மேற்கு (வடக்கு) ஒன்றிய கழகம் சார்பில் பூத் கமிட்டி கூட்டம் குலமங்கலத்தில் ஒன்றிய கழக செயலாளர் வாசு (எ) பெரியணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆலோசனை வழங்கி பேசியதாவது:-

பொதுவாக தேர்தல் பிரச்சாரத்தை நாம் ஒரு மாதம் முன்பாக ஆரம்பித்து விடுவோம். ஆனால் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கழகத்தின் முதலமைச்சர் வேட்பாளராக மீண்டும் எடப்பாடியாரை அறிவித்துள்ளார். இதன் மூலம் 7 மாதங்களுக்கு முன்பே நாம் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டோம். மதுரை கிழக்கு தொகுதியில் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வண்ணம் மூன்றுமாவடி ஆனையூர் பகுதி சாலை ரூ.50 கோடி மதிப்பில் போடப்பட்டுள்ளது. அதேபோன்று இப்பகுதியில் உள்ள ஏரிகள் எல்லாம் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்டதால் நிரம்பி உள்ளது.

இத்தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி இப்பகுதி மக்கள் முன்னேற்றத்திற்கு எந்த திட்டத்தையும் செய்யவில்லை. இதை நீங்கள் மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். தி.மு.க. ஆட்சியை எடுத்துக் கொண்டால் மக்களுக்கு வேதனையைத்தான் தந்தனர். கருணாநிதி வல்லவர். ஆனால் நல்லவர் கிடையாது. அவரது மகன் ஸ்டாலின் நல்லவரும் கிடையாது, வல்லவரும் கிடையாது. அவரிடம் எந்த தகுதியும் இல்லை. ஸ்டாலினால் நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது. வருகிற 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தலைமை கழகம் அறிவிக்கும் வேட்பாளரை அமோக வெற்றி பெறச் செய்து என்றைக்கும் அம்மாவின் கோட்டை மதுரை கிழக்கு தொகுதி என்பதை மீண்டும் நிரூபிக்க பூத் கமிட்டி நிர்வாகிகள் அயராது பாடுபட வேண்டும்.

இவ்வாறு வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்

இக்கூட்டத்தில் மதுரை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் தக்கார் பாண்டி, மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் எம்.ரமேஷ், மாவட்ட கழக அவைத்தலைவர் எஸ்.என்.ராஜேந்திரன், மாவட்ட கழக பொருளாளர் அம்பலம், மாவட்ட கழக துணை செயலாளர் முத்துக்குமார், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய செயலாளர் கணேசன், வண்டியூர் பகுதி கழக செயலாளர் செந்தில்குமார், திருப்பாலை பகுதி கழக செயலாளர் ஜீவானந்தம், ஆனையூர் பகுதி கழக செயலாளர் கோபி, பொதுக்குழு உறுப்பினர் தனம் போஸ், மாவட்ட மாணவரணி செயலாளர் முத்துகிருஷ்ணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.