தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தல் முற்றிலும் ஒழிப்பு – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி

திருவண்ணாமலை

தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

பின்னர் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

முதலமைச்சர் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத திட்டமான அம்மா நகரும் நியாய விலைக் கடை திட்டத்தை செயல்படுத்தி, ஒரு சாமானிய முதலமைச்சராக திகழ்ந்து வருகிறார். தமிழ்நாட்டில் 3501 அம்மா நகரும் நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகிறது, இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 212 அம்மா நகரும் நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகிறது.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்த போது ஜவ்வாதுமலை பகுதியில் உள்ள மலைவாழ் மக்களுக்கு 6 நடமாடும் நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வந்தது. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதியில் மலை கிராமங்கள் அதிகளவு உள்ளதால் அங்கு மட்டும் 85 அம்மா நகரும் நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்கு அருகாமையில் சென்று அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவது, முதலமைச்சரின் மாபெரும் சாதனை ஆகும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் நடைமுறையில் உள்ளது. கூட்டுறவுத் துறையில் பணி நியமனம் முறையாக தேர்வு நடத்தப்பட்டு விரைவில் நிரப்பப்படும். தமிழ்நாட்டில் ரேஷன் அரிசி கடத்தல் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது.

மேலும், குடும்ப அட்டைதாரர்களுக்கு போதுமான அளவிற்கு விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பண்ணை பசுமை நியாய விலைக் கடைகளில் வெங்காயம் மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா போன்ற பல்வேறு மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்டு குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.