தற்போதைய செய்திகள்

நன்னிலம் அரசு கல்லூரி மாணவிகளுக்கு ரூ.3.34 கோடியில் புதிய விடுதி கட்டடம் – அமைச்சர் ஆர்.காமராஜ் அடிக்கல் நாட்டினார்

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், மூலமங்களம் கிராமத்தில் பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவிகளுக்கு ரூ.3.34 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய விடுதி கட்டடத்திற்கு உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் அடிக்கல் நாட்டினார்.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், மூலமங்களம் கிராமத்தில் பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவிகளுக்கு ரூ.3.34 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய விடுதி கட்டடத்திற்கு உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சாந்தா தலைமை வகித்தார்.

விழாவில் அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியதாவது:-

தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்திய புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழியில் செயல்படும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழக மக்களின் நலன் காக்கின்ற வகையில் திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்.

கொரோனா தொற்றிலிருந்து தமிழக மக்களை பாதுகாத்திடும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டு அந்த பணிகளை திறம்பட செயலாற்றிட அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இதன் அடிப்படையில், கொரோனா நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இது போன்ற காலகட்டத்தில் மக்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டப்பணிகள், மக்களுக்கு தேவையான திட்டங்களில் தொய்வு ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்து, அத்தகைய திட்டங்களையும் உடனுக்குடன் நிறைவேற்றிட உத்தரவிட்டுள்ளார்.

அதனடிப்படையில் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட, மூலமங்களம் கிராமத்தில் நன்னிலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவிகளுக்கான புதிய விடுதி கட்டடம் கட்டப்படவுள்ளது. இந்த கட்டடம் தரைதளம், முதல்தளம், இரண்டாம் தளம், மூன்றாம் தளம் என 14488.34 சதுர அடியில் மாணவிகள் தங்கும் அறைகள், படிப்பறைகள், நவீன உணவு கூடம், நவீன சமையல் அறை, நவீன வசதிகளுடன் கூடிய கழிவறைகள் மற்றும் குளியல் அறைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறை, பாதுகாப்புடன் கூடிய சமையல் எரிவாயு அறை என அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் ரூ.3.34 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் பேசினார்.

இந்நிகழ்வில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மோகனசுந்தரம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பூஷணகுமார், உதவி செயற்பொறியாளர் சிங்காரவேல், இளம் பொறியாளர் ஸ்ரீதரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.