தற்போதைய செய்திகள்

2021-ல் எடப்பாடியார் தலைமையில் மீண்டும் நல்லாட்சி மலர்வது உறுதி – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேச்சு

திருப்பூர்

வரும் 2021-ல் எடப்பாடியார் தலைமையில் மீண்டும் நல்லாட்சி மலர்வது உறுதி என்று அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கூறினார்.

திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட கழக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பல்லடம் வைஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், கால்நடைத்துறை அமைச்சருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். பல்லடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பல்லடம் வடக்கு ஒன்றிய கழக செயலாளருமான கரைப்புதூர் ஏ.நடராஜன் முன்னிலை வகித்தார். நகர கழக செயலாளர் ஏ.எம்.ராமமூர்த்தி வரவேற்றார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

முதல்வர் எடப்பாடியாரும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மக்கள் நலனுக்காகவே கழகத்தை தலைமை தாங்கி நடத்தி வருகிறார்கள். பொங்கல் பண்டிகைக்கு கூட ரூ.2500 வழங்கி எந்த ஒரு அரசும் செய்யாத சாதனையை நமது முதல்வர் எடப்பாடியார் செய்துள்ளார். பல்லடம் நகரில் அம்மா அவர்களின் பெயரில் அரசு கல்லூரி, புறவழிச்சாலை, கூட்டு குடிநீர் திட்டம் என எண்ணற்ற திட்டங்களை தந்த அரசு முதல்வர் எடப்பாடியாரின் அரசு.

வரும் தேர்தலில் கழகம் மாபெரும் வெற்றிபெறும் வண்ணம் கழக அரசின் சாதனைகளை ஒவ்வொரு தனி மனிதனிடத்திலும் எடுத்து சொல்ல வேண்டும். அதற்காக கிளைகள் தோறும் பூத்கமிட்டி அமைத்து இருக்கிறோம். பூத் ஏஜெண்டுகள் முகவர்கள் மூலமாக அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும். மகளிர் தான் வீடுகளுக்குள் சென்று கழக அரசின் சாதனைகளை வீட்டில் உள்ள பெண்களிடம் சொல்ல முடியும் என்பதால் பூத் கமிட்டியில் பெண்கள் அதிகம் பேரை சேர்த்து பணியாற்ற வேண்டும். வரும் தேர்தலில் முதல்வர் எடப்பாடியாரின் வெற்றி உறுதி.

இவ்வாறு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசினார்.

இந்த கூட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவம், மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் புத்தரச்சல் பாபு, வழக்கறிஞர் அணி செயலாளர் கே.என்.சுப்பிரமணியம், மகளிரணி செயலாளர் சித்ராதேவி, மாவட்ட பொருளாளர் வி.எம்.சண்முகம், விவசாய பிரிவின் பல்லடம் தெற்கு ஒன்றிய செயலாளர் சித்துராஜ், தண்ணீர் பந்தல் நடராஜன், தர்மராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.