தற்போதைய செய்திகள்

கரூர் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.10 லட்சத்தில் வேளாண் இயந்திரங்கள் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்

கரூர்

கரூரில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.10 லட்சத்தில் வேளாண் இயந்திரங்களை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் மகளிர் திட்டம் உள்ளிட்ட துறைகளின் சார்பில் ரூ.2.70 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அடிக்கல் நாட்டி முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் சு.மலர்விழி தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன், தமிழகத்தில் நல்லாட்சி நடத்தி வரும் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரின் ஆணைக்கிணங்க கரூர் மாவட்டத்தில் மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளாக கருதப்படும் குடிநீர், சாலை, மின்விளக்கு உள்ளிட்ட வசதிகளும், சமுதாயக்கூடம், கால்நடை மருந்தகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மக்களின் நலன் அறிந்து, தேவைகளை உணர்ந்து அனைத்து விதமான வசதிகளும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு துணை வேளாண் இயந்திரத் திட்டத்தின் மூலம் வேளாண் கருவிகள் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்படி வேளாண் இயந்திரங்களை வாங்குவதற்கு ஆகும் தொகையில் சுயஉதவி குழுவினர் 5 சதவீதமும், மகளிர் திட்டத்தின் சார்பில் 15 சதவீதமும், வேளாண் பொறியியல் துறையின் சார்பில் 80 சதவீதமும் தங்களின் பங்குத்தொகையினை வழங்குவர். அதனடிப்படையில் இங்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான 17 வேளாண் இயந்திரங்கள் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதை சுய உதவிக்குழுவினர் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கலாம்.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசினார்.

இதனைத் தொடர்ந்து தெத்துப்பட்டி ஊராட்சி இந்திரா நகர் பகுதியில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான வேளாண் இயந்திரங்களை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.