ராமநாதபுரம்

தி.மு.க. ஆயுள்காலம் முடிந்து விட்டது – எம்.ஏ.முனியசாமி சாடல்

ராமநாதபுரம்

தி.மு.க. ஆயுட்காலம் முடிந்து விட்டது என்று ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி கூறினார்.

ராமநாதபுரம் டி.பிளாக் அருகே உள்ள தனியார் மகாலில் கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் புதிய நிர்வாகிகள் சேர்க்கைக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் ஒன்றிய கழக செயலாளர் எம்.அசோக்குமார், கழக எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் ஆனிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் பால்பாண்டியன் வரவேற்று பேசினார். மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி, கழக சிறுபான்மை பிரிவு செயலாளர் அன்வர்ராஜா ஆகியோர் ஆலோசனை வழங்கி பேசினர்.

இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கனவை நனவாக்கும் வகையில் கழகமும், ஆட்சியும் தொடர்ந்து வீறுநடை போட வேண்டும். எதிர்க்கட்சிகள் ஆயிரம் பொய் விமர்சனங்களை முன் வைத்தாலும் அதனை நமது தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்தவர்களும், இளைஞர் பாசறை நிர்வாகிகளும் தவிடு பொடியாக்கி எதிர் கட்சியினருக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் செயல்படுகின்றனர். புதிய உத்வேகத்துடன் செயல்படும் இளைஞர்கள் தான் கழகத்திற்கு தேவை. உழைப்பிற்கு மதிப்பளிக்கும் கழகம் இருக்கும் வரை இளைய சமுதாயத்திற்கு சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

நமது குறிக்கோள் ஒன்றுதான். எதிர்க்கட்சிகளை 2021-ல் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் படுதோல்வி அடைய செய்ய வேண்டும். கழகத்தின் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்து அதனை ஒருங்கிணைப்பாளர்களிடம் நாம் சமர்ப்பிக்க வேண்டும். கொள்கையற்ற தலைவர். ஸ்டாலின் கொள்கை குறித்து பேச அருகதை இல்லை. குறிப்பிட்ட மதங்களை இழிவுபடுத்தும் ஸ்டாலின் மதநல்லிணக்கம் பற்றி பேச தகுதி இல்லை. விதைத்ததை தான் அறுவடை செய்ய முடியும். ஸ்டாலின் எதை விதைத்தாரோ அதை தான் 2021-ல் அறுவடை செய்வார். திமுகவின் ஆயுட்காலம் முடிந்து விட்டது. இனி ஒருபோதும் திமுக ஆட்சி அமைக்க முடியாது.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட மாணவரணி செயலாளர் செந்தில்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணகுமார், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் உதுமான் அலி உள்பட கழக திரளாக கலந்து கொண்டனர்.