திருவண்ணாமலை

ஆவினில் சுவைமிகுந்த இனிப்புகள் அறிமுகம் – அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தகவல்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட ஆவினில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளதாகவும், இங்கு சுவை மிகுந்த இனிப்பு வகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆவின் தலைவர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தொகுதி சிறுகிளாம்பாடி கிராமத்தில் புதிதாக மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு ஆவின் பொது மேலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் நாராயணன், துரிஞ்சாபுரம் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோவிந்தராஜ், மல்லவாடி நிலவள வங்கி தலைவர் சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறுகிளாம்பாடி பால் கூட்டுறவு சங்கத்தலைவர் விஜயலட்சுமி வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், மாவட்ட ஆவின் தலைவருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய மகளிர் பால் கூட்டுறவு சங்கத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

கொரோனா நேரத்தில் தனியார் நிறுவனங்களில் பால் கொள்முதல் செய்ய முடியாமல் இருந்த நிலையிலும் ஆவின் சார்பில் கூட்டுறவு சங்கங்களில் பால் வாங்கப்படுவது எக்காரணத்தை கொண்டும் நிறுத்தப்படவில்லை. இதனால் கிராமப்புறங்களில் உள்ள பெண்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் குடும்பம் நடத்த முடிந்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமப்புறப் பகுதிகளிலும் பால் கூட்டுறவு சங்கங்கள் திறக்கப்பட்டு வருகிறது. இந்த சங்கங்கள் மூலம் பால் ஊற்றுபவர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். பால் மற்றும் பால்பொருட்களை நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில் வழங்கி, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் பால் விற்பனையில் தமிழகத்தின் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுவைமிகுந்த சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனையை திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆவின் தொடங்கியுள்ளது. ஸ்டப்டுடிரை ஜாமுன் 250 கிராம் ரூ.190, நட்டிமில்க் கேக் 250 கிராம் ரூ.190, ஸ்டப்டுமோதிபாக் 250 கிராம் ரூ.170, காஜுபிஸ்தா ரோல் 250 கிராம் ரூ.225, பிளேவர்டு மில்க் பர்பி 250 கிராம் ரூ.165க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மேற்கண்ட 5 வகையான இனிப்புகள் அடங்கிய பேக் 500 கிராம் ரூ.375க்கு கிடைக்கும்.

மேலும் பால் உப பொருட்களான வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா, மைசூர்பாகு, குலாப்ஜாமுன், ரசகுல்லா, லஸ்ஸி, நோய் எதிர்ப்பு சக்தி மோர், சாக்லேட், ஐஸ் கிரீம் முதலான பால் பொருட்களையும் உயரிய தரத்தில் விற்பனை செய்து வருகிறது. அத்துடன் கால சூழ்நிலைக்கேற்றவாறு நுகர்வோர்களின் தேவைக்கேற்ப நோய் எதிர்ப்புத் தன்மையினை கூட்டும் புதிய பால் உப பொருட்களை அவ்வப்போது ஆவின் நிறுவனம் அறிமுகப்படுத்தி விற்பனைசெய்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நாராயணன், ஆவின் மேலாளர் காளியப்பன், விரிவாக்க அலுவலர் கலைச்செல்வி, ஊராட்சி மன்ற தலைவர்கள் நார்த்தாம்பூண்டி செந்தில்குமார், பெரியகிளாம்பாடி சுசீலா, மேப்பத்துரை தேவகிகுமார், வேளாங்கண்ணி நகர பால் கூட்டுறவு சங்க தலைவர் பழனிராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜமூர்த்தி, மண்ணு, டாக்டர் தமிழ்ராஜன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வெள்ளகண்ணு, மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.