தற்போதைய செய்திகள்

மேலும் 125 அம்மா நகரும் நியாய விலைக்கடை தொடங்க அனுமதி – அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 125 அம்மா நகரும் நியாய விலை கடைகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட பத்தினியாபுரம், திருப்பணிபேட்டை, கம்மங்குடி, தென்குடி, கூத்தனூர், கொல்லுமாங்குடி, தேவூர், திருமெய்ஞானம், பாவட்டக்குடி, மணலி, உபயவேதாந்தபுரம், களக்குடி, வாரக்குப்பம் ஆகிய பகுதிகளில் அம்மா நகரும் நியாய விலைக்கடைகள் சேவையை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சாந்தா தலைமை வகித்தார்.

விழாவில் அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியதாவது:-

தொலைதூரங்களில் இருக்கும் குக்கிராமங்களில் சில நிர்வாக காரணங்களால் பகுதிநேர அங்காடிகள் திறந்திட வாய்ப்பு இல்லாததால் அப்பகுதிகளில் வாழும் மக்களின் இன்னல்களை களையும் பொருட்டும், பொது விநியோக திட்ட பொருட்களை வாங்குவதற்காக நெடுஞ்சாலை, ஆறு, ரயில்வே இருப்பு பாதை மற்றும் அதிக தூரம் ஆகியவற்றினை கடந்து செல்லவேண்டிய நிலைகள் உள்ளதையும் கருதி பொது மக்களின் இத்தகைய சிரமங்களை நீக்கி நன்மை அடையும் பொருட்டு மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் பொருட்டு அம்மா நகரும் நியாய விலைக்கடைகள் என்ற திட்டத்தை முதலமைச்சர் அறிமுகப்படுத்தி தொடங்கி வைத்துள்ளார்.

அந்தவகையில் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட பத்தினியாபுரம், திருப்பணிபேட்டை, கம்மங்குடி, தென்குடி, கொல்லுமாங்குடி, தேவூர், திருமெய்ஞானம், பாவட்டக்குடி, மணலி, உபயவேதாந்தபுரம், களக்குடி, வாரக்குப்பம், கூத்தனூர் ஆகிய பகுதிகளில் அம்மா நகரும் நியாய விலைக்கடை சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, திருவாரூர் மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை பெற்று செல்வதில் சிரமங்கள் உள்ள கிராமங்கள் கண்டறியப்பட்டு அம்மக்களின் சிரமங்களை நிவர்த்தி செய்கின்ற வகையில் 125 அம்மா நகரும் நியாய விலைக்கடைகள் தொடங்கிட அனுமதிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 64 கூட்டுறவு நிறுவனங்கள் நடத்திடும் 106 நியாய விலைக்கடைகளிலிருந்து 125 அம்மா நகரும் நியாய விலைக்கடைகள் செயல்படுத்தப்படவுள்ளது. இதன்மூலம் 16,428 குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசிய பொருட்களை அவரவர் குடியிருப்பு அருகிலேயே பெற்று பயனடைவார்கள்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் பேசினார்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஆசைமணி, கூத்தனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித்தலைவர் ராமகுணசேகரன், ஒன்றியக்குழு துணைத்தலைவரும், தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கித்தலைவருமான சி.பி.ஜி.அன்பு, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் சம்பத், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.