தற்போதைய செய்திகள்

4.17 லட்சம் மகளிர் குழுக்களுக்கு ரூ.7,517 கோடி கடன் உதவி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்

விழுப்புரம்

கூட்டுறவுத்துறை சார்பில் 4.17 லட்சம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.7,517 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

விழுப்புரத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழியில் செயல்படும் முதலமைச்சர், தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக உயர்த்திட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளை விரைவாக எடுத்து நம் மாநிலத்தில் நோய் பரவலை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார். தமிழக கூட்டுறவுத்துறை அம்மா அவர்களின் ஆட்சியில்தான் புதுப்பொலிவு பெற்றது. தொடர்ந்து முதலமைச்சர் அறிவுரைப்படி பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாநில அளவில் கூட்டுறவுத்துறையின் மூலம் 2011 முதல் 22.10.2020 வரை 1,01,75,629 விவசாயிகளுக்கு ரூ.56,541.04 கோடியும், நடப்பாண்டில் 22.10.2020 வரை 6,17,241 விவசாயிகளுக்கு ரூ.4,762 கோடியும் வட்டியில்லா பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மண்டலத்தில், 7,52,357 விவசாயிகளுக்கு ரூ.4,142 கோடி பயிர்க் கடனும், நடப்பாண்டில் 31.10.2020 வரை 54,432 விவசாயிகளுக்கு ரூ.389 கோடி வட்டியில்லா விவசாயக் கடன் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அளவில் பயிர் காப்பீடு இழப்பீடாக 15.10.2020 வரை 49,62,760 விவசாயிகளுக்கு ரூ.8,915 கோடியும், இதில் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக 24,87,447 விவசாயிகளுக்கு ரூ.5,527 கோடியும், குறிப்பாக, விழுப்புரம் மண்டலத்தில் 31.10.2020 வரை 68,223 விவசாயிகளுக்கு ரூ.126 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கூட்டுறவுத்துறை மூலம் 5,17,800 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 4,044 கிடங்குகள் ரூ.533.78 கோடி மதிப்பில் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.

தமிழ்நாட்டில் 7 லட்சம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன. இதில் 103 லட்சம் மகளிர் உறுப்பினர்களாக உள்ளனர். கூட்டுறவுத்துறை மூலம் 2011-2012 முதல் 30.09.2020 வரை 4,17,073 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.7,517 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில், விழுப்புரம் மண்டலத்தில் 7148 குழுவின் உறுப்பினர்களுக்கு ரூ.74 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.