மதுரை

முதலமைச்சரின் சாதனைத் திட்டங்கள் புத்தக வடிவில் மக்களுக்கு விநியோகம் – வி.வி.ராஜன் செல்லப்பா நூதன பிரச்சாரம்

மதுரை

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் வெற்றி `நடைபோடும் தமிழகம்’ என்ற முதலமைச்சர் சாதனைத் திட்டங்களை மக்களுக்கு வழங்கி மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா பிரச்சாரம் செய்தார்

கடந்த நான்கரை ஆண்டு காலமாக முதலமைச்சர் செய்த சாதனை திட்டங்களை மக்களுக்கு எளிதில் விளங்கும் வகையில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் புத்தக வடிவில் அச்சடித்து வழங்கும் நிகழ்ச்சி திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது. இந்த சாதனை திட்ட புத்தகங்களை மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பொதுமக்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

கடந்த நான்கரை ஆண்டு காலம் அனைத்து துறைகளிலும் பல்வேறு சாதனைகளை அம்மாவின் அரசை தலைமை தாங்கி நடத்தி வரும் முதலமைச்சர் செய்துள்ளார். வளர்ச்சி பாதையில் முதலிடம், மகிழ்ச்சி பாதையில் தமிழகம் என்று வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற சாதனை தொகுப்புகளை மக்களுக்கு வழங்கி அதன்மூலம் கழகத்திற்கு இமாலய வெற்றியை பெற்று தந்திடும் வண்ணம் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் திருப்பரங்குன்றம், மேலூர், மதுரை கிழக்கு ஆகிய தொகுதி மக்களிடம் வழங்க உள்ளோம்.

திமுக தலைவர் ஸ்டாலின் மக்கள் மத்தியில் பொய் பிரச்சாரம் செய்கிறார். கழகத்தை நிராகரிப்பு செய்வதற்கு சாதாரண இயக்கம் அல்ல. ஸ்டாலின் தமிழகத்தை யாரிடம் இருந்து மீட்க போகிறார் என தெரியவில்லை, தமிழகம் வெற்றி பாதையில் செல்கிறது. கழகத்துக்குள் எந்த பிளவும் இல்லை. ஜனவரி 3-ந்தேதி திமுக 2 ஆக உடையும். ஒரு அணி மு.க.அழகிரி தலைமையில் செயல்படும். 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கழகம் பெரும்பான்மையுடன் வெற்றிபெறும்.

இவ்வாறு மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.