தற்போதைய செய்திகள்

விழுப்புரத்தில், 25,456 பயனாளிகளுக்கு ரூ.150.92 கோடி அரசு நலத்திட்ட உதவி -அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ- சி.வி.சண்முகம் வழங்கினர்

விழுப்புரம்

விழுப்புரத்தில் கூட்டுறவுத்துறை சார்பாக நடைபெற்ற அரசு விழாவில் ரூ.57 லட்சம் மதிப்பிலான 3 புதிய கிடங்குகளுக்கான கல்வெட்டினை திறந்து வைத்து, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் 25,456 பயனாளிகளுக்கு ரூ.150.92 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இவ்விழாவில், 17,853 விவசாயிகளுக்கு பயிர்க் கடனாக ரூ.120 கோடியும், மகளிருக்கு மகளிர் சுய உதவிக் குழுக்கடனாக 5524 பேருக்கு ரூ.8.48 கோடியும், சிறு வணிகக் கடனாக 69 பேருக்கு ரூ.35 லட்சமும், மத்திய காலக் கடனாக 820 பேருக்கு ரூ.7.94 கோடியும், மத்திய காலக் கடனாக (டிராக்டர்) 21 நபர்களுக்கு ரூ.176 லட்சமும். மாற்றுத்திறனாளி கடனாக 43 நபர்களுக்கு ரூ.21 லட்சமும் என பல்வேறு கடனுதவிகள் மொத்தம் 25,456 பயனாளிகளுக்கு ரூ.150.92 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.

இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கூட்டுறவுத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து கூட்டுறவுத்துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, சி.வி.சண்முகம் தலைமையில் நடைபெற்றது.