திருவண்ணாமலை

60 பால் உற்பத்தியாளர்களுக்கு மின்சார புல்வெட்டும் இயந்திரம்- அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் 60 பால் உற்பத்தியாளர் பயனாளிகளுக்கு 70 சதவீத மானியத்தில் மின்சார புல்வெட்டும் இயந்திரங்களை திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், மாவட்ட ஆவின் தலைவருமான அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்.

திருவண்ணாமலையில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு 70 சதவீத மானிய விலையில் மின்சார புல் வெட்டும் இயந்திரம் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு ஆவின் பொது மேலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். ஆவின் துணை பொது மேலாளர் நாச்சியப்பன் முன்னிலை வகித்தார். மேலாளர் காளியப்பன் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட ஆவின் தலைவருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 60 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் புல்வெட்டும் இயந்திரங்களை வழங்கி பேசியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் 2019-2020-ம் ஆண்டிற்கான மானிய விலையில் மின்சார புல் நறுக்கும் கருவி கூட்டுறவு சங்கங்களில் பால் ஊற்றும் 60 பயனாளிகளுக்கு 70 சதவீத மானியத்தில் திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் சார்பில் வழங்கப்படுகிறது.

இதனால் பால் உற்பத்தியாளர்கள் எளிய முறையில் புல் நறுக்கவும், எளிதில் தீவனம் எடுத்துக் கொள்ளவும் வசதியாக இருக்கும். ரூ.24 ஆயிரம் மதிப்புள்ள இக்கருவி 70 சதவீதம் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனை எடுத்துச் செல்லும் கிராமப்புற விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்தி கால்நடைகளை சரியான முறையில் பராமரித்து பால் பெருக்கத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆவின் தலைவர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நைனாகண்ணு, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் கோவிந்தராஜ், ஜானகிராமன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தென் மாத்தூர் கலியபெருமாள், நிலவள வங்கி தலைவர் சம்பத், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் தொப்பளான், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் அன்பரசு, தரணிதரன், கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.