தற்போதைய செய்திகள்

கல்வி திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவுக்கே தமிழ்நாடு வழிகாட்டி – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு

திருநெல்வேலி

கல்வி திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவுக்கே தமிழ்நாடு வழிகாட்டியாக திகழ்கிறது என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

திருநெல்வேலி மாவட்டம் சங்கர்நகர் ஸ்ரீஜெயேந்திரா சரஸ்வதி சுவாமிகள் கோல்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தனியார் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மெட்ரிக் பள்ளிகள் இணை இயக்குநர் எஸ்.கோபிதாஸ் வரவேற்றார். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமை தாங்கினார். தொடர் அங்கீகார ஆணைளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசுகையில், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் காலக்கட்டத்தில் கல்வித்துறை மணிமகுடமாக திகழ்கிறது. அரசுக்கு சிறப்பான நற்சான்றுகளையும் பெற்று தந்துள்ளார். நீட்தேர்வில் தமிழக மாணவர்கள் அதிகம் பேர் வெற்றி பெற்றுள்ளனர் என்றார்.

பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:-

ஏழை எளிய மக்கள் முன்னேற்றம் பெற கல்வி அவசியம் என்பதை உணர்ந்து புரட்சித்தலைவர் பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர் மதியம் சத்துணவு தந்து குழந்தைகளை பள்ளிக்கு அழைத்தார். சத்துணவு திட்டத்திற்கு எங்கே இருந்து நிதி வருகிறது என்று கேட்ட எதிர்கட்சி தலைவருக்கு, நான் துண்டு ஏந்தி பிச்சை எடுத்தாவது இத்திட்டத்தை நடத்துவேன் என புரட்சித்தலைவர் கூறினார். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பள்ளி மாணவர்களுக்கென 14 வகையான திட்டங்களை தந்தார். இந்திய வரலாற்றிலேயே தமிழகத்தில் தான் இத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது

மடிகணினிகள் வழங்கி வந்த பீகார் மற்றும் உத்தரபிரதேச அரசுகள் ஒரு வருடம் வழங்கி விட்டு நிறுத்தியுள்ளது. தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது. இந்தியாவுக்கே வழிகாட்டியாக தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. தமிழக அரசின் மருத்துவத்துறை சிறப்பாக செயல்படுகிறது என்று பிரதமர் பாராட்டியுள்ளார்.

நர்சரி பள்ளிகளுக்கும் கட்டிடங்கள் சீராக இருந்தால் அதற்கும் ஆணையை வழங்க இருக்கிறோம். உங்களுடைய கஷ்டங்கள் எங்களுக்கு தெரியும். தமிழக அரசின் பாடத்திட்டம் சிறப்பாக இருக்கிறது என்று மத்திய அமைச்சரும் பாராட்டியுள்ளார். மத்திய அரசும் பாராட்டி உள்ளது. தமிழக அரசுப் பள்ளியில் படிக்கின்ற மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு செல்ல நீட்தேர்வில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு பெற்று தந்ததன் மூலம் 300க்கும் மேற்பட்ட ஏழை எளிய மாணவர்கள் பயன்பெற உள்ளனர். கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி 7200 பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பு தொடங்கியுள்ளோம். மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி தர இந்த அரசு தயாராக இருக்கிறது.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.