தற்போதைய செய்திகள்

250 நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.4 லட்சம் மதிப்பில் நிழற்குடை – அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்

கடலூர்

கடலூர் மத்திய மாவட்ட கழக எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் 250 நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.4 லட்சம் மதிப்பில் கழக கொடி பொறித்த நிழற்குடைகளை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.

கடலூர் மத்திய மாவட்ட கழக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி சார்பில் நடைபாதை வியாபாரிகளுக்கு கழக கொடி பொறித்த நிழற்குடை வழங்கும் நிகழ்ச்சி கடலூர் வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி தலைவர் கெமிக்கல் ஆர்.மாதவன் தலைமை தாங்கினார். கடலூர் நகர கழக செயலாளர் ஆர்.குமரன் முன்னிலை வகித்தார். இதில் கடலூர் மத்திய மாவட்ட கழக செயலாளரும், தொழில்துறை அமைச்சருமான எம்.சி.சம்பத் கலந்து கொண்டு 250 நடைபாதை வியாபாரிகளுக்கு நிழற்குடைகளை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது:-

தமிழகத்தில் இப்பொது ஏழை எளிய மக்களுக்கான ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. பாமர மக்களும் எளிதில் அணுகக்கூடிய முதல்வர் எடப்பாடியார் அம்மாவின் ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறார். ஏழை, எளிய மக்களின் பிரச்சினைகளை அறிந்தவர்கள் கழகத்தினர் மட்டுமே. அதனால் தான் நடைபாதை வியாபாரிகள் வெயிலிலும், மழையிலும் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக இந்த இடத்தில இந்த நிகழ்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. 250 நடைபாதை வியாபாரிகளுக்கு கழகத்தின் சார்பில் நான்கு லட்சம் ரூபாய் மதிப்பில் கழக கொடி பொறித்த நிழற்குடைகளை எம்.ஜி.ஆர் இளைஞர் அணி சார்பில் வழங்கியுள்ளோம்.

இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.

இந்த விழாவில் மாவட்ட மீனவரணி செயலாளர் கே.என்.தங்கமணி, நகர துணை செயலாளர் வ.கந்தன், நகர அவைத்தலைவர் எம்.ஜி.ஆர் என்கிற ராமச்சந்திரன், பொருளாளர் எஸ்.தனசேகரன், மாவட்ட பிரதிநிதிகள் ஆர்.வி.மணி, பி.கே.வெங்கட்ராமன், தலைமை கழக பேச்சாளர் புலிசை ஆர்.சந்திரகாசன், 23-வது வார்டு செயலாளர் ஏ.ஆர்.சி.நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.