தற்போதைய செய்திகள்

மக்கள் தான் எஜமானர்கள் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேச்சு

மதுரை

மக்கள் தான் எஜமானர்கள் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் 1-வது வார்டு ஹெச்.எம்.எஸ். காலனியில் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள சமுதாய கூடத்தின் கட்டுமான பணியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று துவக்கி வைத்து செல்லூர் ரவுண்டானாவில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கபடி வீரர்கள் சிலையையும் பார்வையிட்டுஆய்வு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-

மதுரை மாநகராட்சியில் ஸ்வச் ஐகானிக் இடங்கள் திட்ட நிதியின் கீழ் திருப்பரங்குன்றம் ரவுண்டானா, பழங்காநத்தம் ரவுண்டானா, பாத்திமா கல்லூரி ரவுண்டானா, செல்லூர் ரவுண்டானா ஆகிய நான்கு இடங்களில் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இவற்றில் மதுரையின் சிறப்பை விளக்கும் வகையில் ஆங்காங்கே சிலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டு பெருமையை விளக்கும் வகையில் ஜல்லிக்கட்டு காளையும், மதுரையின் பெருமையான தேர்திருவிழாவை நினைவு கூறும் வகையில் மீனாட்சியம்மன் தேரும், பழங்காநத்தத்தில் 10 தூண்களும் அமைக்கப்பட்டுள்ளது. அதே போன்று உலக நாடுகளில் வரவேற்கக்கூடிய கபடி வீரர்களின் பெருமையை போற்றும் வகையில் இந்தியாவிலேயே மதுரையில் செல்லூர் பகுதியில் உள்ள ரவுண்டானாவில் கபடி வீரர்கள் சிலை ரூ.66 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது.

தேர்தல் நேரம் என்பதால் அவரவர் கட்சியை வலுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். முதலமைச்சர் தமிழகம் அமைதிப் பூங்காவாக விளங்குவதற்காக சட்டம்- ஒழுங்கை பேணி காக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். எதிர்க்கட்சிகளுக்கு ஜனநாயக பாதுகாப்பை வழங்ககூடியது தான் இந்த அரசு, கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. 7 பேர் விடுதலைக்காக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதே அம்மாவின் அரசுதான். முதலமைச்சர் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதில் அம்மாவிற்கு அடுத்தபடியாக சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

நீர்மேலாண்மையில இந்தியாவிலேயே சிறந்த மாநகராட்சியாக 2-வது இடத்தில் மதுரை மாநகராட்சி தேர்வானவதற்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பொதுவாக மதுரை மாநகராட்சி நீர் பற்றாக்குறை உள்ள மாநகராட்சி முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் அடிப்படையில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 33 ஊரணிகள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு 11 ஊரணிகள் பணிகள் முடிக்கப்பட்டு, 16 ஊரணிகளில் பணிகள் நடைபெற்று வருகிறது. மீதமுள்ள ஊரணிகளில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் நீர்வரத்து வாய்க்கால்கள் சீர்படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற சிறந்த பணிகளுக்காகத்தான் இந்த பரிசு கிடைத்துள்ளது.

தேர்தல் நேரம் என்பதால் எதிர்க்கட்சிகள் ஏதேனும் சொல்லிக் கொண்டுதான் இருப்பார்க.ள் அதனை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை. எங்களது பணி மக்களுக்கு சேவையாற்றுவது மக்களுடைய நம்பிக்கையை பெற்ற அரசாக இந்த அரசு விளங்குகிறது.

ஒவ்வொரு கட்சியும் அவர்களது தொண்டர்களை உற்சாகப் படுத்துவதற்காக அவரவர் கருத்துக்களை சொல்வார்கள். நாட்டின் இறுதி எஜமானர்கள் மக்கள்தான். கொரோனா காலத்திலும் முதலமைச்சர் ஒவ்வொரு மாவட்டமாக சென்று தடுப்பு பணிகளையும், வளர்ச்சி பணிகளையும் சிறப்பாக மேற்கொண்டு வருகிறார். மக்களுடைய பிரச்சினைகளுக்கு இந்த அரசு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறது. இது மக்களுடைய அரசு என்பதன் அடிப்படையிலேயே பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.

இந்நிகழ்ச்சியில் ஆணையாளர் ச.விசாகன், நகரப்பொறியாளர் அரசு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ்.பாண்டியன், பாண்டியன் கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா, தமிழ்நாடு ஒலிம்பிக் துணைத் தலைவர் சோலைராஜா, உதவி ஆணையாளர் சேகர், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர்கள் குழந்தைவேலு, மனோகரன், சுகாதார அலுவலர்கள் ராஜ்கண்ணன், சிவசுப்பிரமணியன், உதவிப் பொறியாளர் பாபு, சுகாதார ஆய்வாளர் கோபால் உள்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.