தற்போதைய செய்திகள் மற்றவை

மாணவன் சாவுக்கு நீதிகேட்டு பொதுமக்கள் போராட்டம் – பண்ருட்டி அருகே பரபரப்பு

கடலூர்

பண்ருட்டி அருகே இறங்கும்போது பஸ் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த மாணவன் சாவுக்கு நீதிகேட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூரை அடுத்த சாவடி பகுதியை சேர்ந்தவர் அப்துல் காதர். இவரது மகன் முகமது அப்பாஸ் (வயது 11). இவர் பண்ருட்டியை அடுத்த பக்கரி பாளையத்தில் உள்ள அரபி மதர்சா பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம் கடலூரில் இருந்து பள்ளி பேருந்தில் செல்வது வழக்கம்.

வழக்கம் போல நேற்று காலை மாணவன் முகமது அப்பாஸ் பள்ளிக்கு கடலூரில் இருந்து பேருந்தில் சென்றார். பக்கரிபாளையம் நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால் செய்வதறியாது திகைத்த மாணவன் முகமது அப்பாஸ் ரயில்வே கேட் வேக தடையில் சென்றபோது பேருந்தில் இருந்து இறங்கியுள்ளார். நிலை தடுமாறி பேருந்து சக்கரத்தில் சிக்கிய அவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

இது பற்றி தகவலறிந்த பக்கிரிபாளையம் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் மாணவன் முகமது அப்பாஸ் சாவுக்கு நீதிகேட்டு பண்ருட்டி- கடலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பண்ருட்டி போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து விபத்தில் இறந்த பள்ளி மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பஸ்சை விட்டு இறங்கும்போது சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த மாணவன் சாவுக்கு நீதி கேட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.