தற்போதைய செய்திகள்

நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ரூ.70 லட்சம் போனஸ், பங்கு ஈவுத்தொகை – அமைச்சர் கே.சி.கருப்பணன் வழங்கினார்

ஈரோடு

நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ரூ.70 லட்சம் போனஸ் மற்றும் பங்கு ஈவுத்தொகைகளை அமைச்சர் கே.சி.கருப்பணன் வழங்கினார்.

ஈரோடு மாவட்டம், பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பவானி காமராஜ் நகர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன்; தலைமையில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் சார்பில், 20 கூட்டுறவு நெசவாளர் சங்கங்களைச் சார்ந்த 2,436 உறுப்பினர்களுக்கு ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் போனஸ் தொகை மற்றும் பங்கு ஈவுத்தொகையினை வழங்கினார்.

இவ்விழாவில் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்தி நல்லாட்சி நடத்தி வருகின்றனர். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி நெசவாளர்களின் நலன் காக்க பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

கூட்டுறவு சங்கங்களின் வாயிலாக பயிர்கடன், மத்திய காலக்கடன், கறவை கடன், ஊக்கத்தொகை போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஈரோடு 04 பவானி சரகத்தில் மொத்தம் 20 தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 2436 தறிகள் இயங்கி வருகின்றது. இதில் ஜமக்காளம், மேட், சால்வை மற்றும் துண்டு ஆகிய இரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. இந்த இரகங்களில் ரூ.24.46 கோடி மதிப்பில் உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனையாக ரூ.29.20 கோடி செய்யப்பட்டுள்ளது. இவ்விற்பனையின் மூலம் நிகர லாபமாக ரூ.1.20 கோடி அடைந்துள்ளது.

மேற்கண்ட விற்பனையின் மூலம் அடைந்த நிகர இலாபத்தில் சங்க உறுப்பினர்களுக்கு போனஸ் தொகை (50 சதவீதம்) ரூ.60.12 லட்சம் மற்றும் பங்கு ஈவு தொகை ரூ.10.63 லட்சம் என மொத்தம் ரூ.70.75 லட்சம் தொகையானது, பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 20 தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் சங்க உறுப்பினர்கள் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தில் உள்ள 2,038 உறுப்பினர்கள், குடும்ப ஓய்வூதிய திட்டத்தில் 1,573 உறுப்பினர்களில் 45 பயனாளிகளும், முதியோர் ஓய்வூதிய திட்டத்தில் 645 உறுப்பினர் மற்றும் இ-முத்ரா கடன் திட்டத்தில் கீழ் 137 உறுப்பினர்களும் பயன் பெறும் வகையில் இன்று வழங்கப்படுகிறது. மேலும் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

தேசிய கைத்தறி வளர்ச்சி கழகத்தின் மூலம் சங்கங்கள் கொள்முதல் செய்யும் நூல் இரகங்களுக்கு 10 சதவீதம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அரசின் நலத்திட்டங்களான இலவச மின்சாரம் 200 யூனிட், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா, புங்கா பீமா யோஜனா, மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் பசுமை வீடு கட்டும் திட்டம் போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக கூட்டுறவு சங்கங்கள் மூலம் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசினார்.