தற்போதைய செய்திகள்

கரூர் நகரில் ரூ.84 லட்சத்தில் சாலை அபிவிருத்தி திட்டம் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பூமிபூஜை

கரூர்

கரூர் நகராட்சிக்கு உட்பட்ட 8, 9, 10 மற்றும் 11-வது வார்டு பகுதியில் உள்ள திட்ட சாலை மெயின் ரோடு மற்றும் பாலகிருஷ்ணாநகர் சாலை அபிவிருத்தி திட்டப்பணிகளை ரூ.84 லட்சம் மதிப்பில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சு.மலர்விழி தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதாவது:-

கரூர் நகராட்சி வார்டு 8, 9 மற்றும் 10-வது வார்டு பகுதியில் உள்ள திட்ட சாலையை ரூ.50 லட்சம் மதிப்பில் பலப்படுத்தும் விதமாக இந்த பணிகள் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த சாலை 14 இணைப்பு சாலைகளை கொண்ட 670 மீட்டர் உள்ள சாலையாகும். இந்த சாலையை பலப்படுத்துவதன் மூலம் சிறு, சிறு தொழிற்சாலைகள் நிறைந்த இப்பகுதியில் உள்ள 14 சாலைகள் வழியாக பொதுமக்கள் முக்கிய சாலையை வந்தடைய முடியும்.

அதேபோல் 11-வது வார்டு பாலகிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள 740 மீட்டர் நீளம் உள்ள சாலை ரூ.34 லட்சம் மதிப்பில் பலப்படுத்தப்படவுள்ளது. இந்த சாலையில் மூன்று இணைப்புச் சாலைகள் உள்ளன. இந்த இரண்டு சாலைகளும் ரூ.84 லட்சம் மதிப்பில் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. உரிய காலத்தில் பணிகளை முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அதேப்போல் கரூர் ரயில் நிலையத்திலிருந்து சேலம் மதுரை புறவழிச்சாலை (எண் 7) வரை அம்மா சாலை ரூ.21.12 கோடி மதிப்பில் அமைக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. இந்த சாலை கரூர் நகரப்பகுதியில் உள்ள 17 சாலைகளை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் முடிவுற்ற பின்பு டெக்ஸ்டைல் நகரமான கரூர் மைய பகுதியிலிருந்து எளிதாக வாகனங்கள் மூலம் சரக்குகளை எடுத்துச் செல்லவும், மூலப்பொருள்களை கொண்டுவர வசதியாக இருக்கும்.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கரூர் வருவாய் கோட்டாட்சியர் என்.எஸ்.பாலசுப்பிரமணியன், நகராட்சி பொறியாளர் நக்கீரன், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தலைவர் பேங்க் நடராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.