தற்போதைய செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் 3 தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகங்கள் திறப்பு : அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார்

கடலூர்:-

கடலூர் மாவட்டத்தில் 3 பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகங்களை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார்.

கடலூர் மாவட்டம், அண்ணாமலை நகரில், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாச்சலம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகங்களின் துவக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கினார்.

ஊரக நலப்பணிகள் இயக்குநர் கோ.அசோக்குமார், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மூன்று தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகங்களை தொடங்கி வைத்து பேசியதாவது:-

கடலூர் மாவட்டத்தில் தற்போது நெய்வேலி, நெல்லிக்குப்பம் மற்றும் வடலூர் ஆகிய மூன்று தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகங்கள் செயல்பட்டு வருகிறது. இம்மருந்தகங்கள் மூலம் மாதம் ரூ.21,000-க்கு கீழ் ஊதியம் பெறும் தனியார் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் பயன்பெற்று வருகின்றனர். இம்மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் பயன்பெற்றுள்ளனர். இத்திட்டத்தில் தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினர்கள், இஎஸ்ஐ மூலமும், அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் மூலமும் சிகிச்சை பெறலாம்.

தொழிலாளர்கள் சிகிச்சை பெறும் காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு பெறலாம். விபத்து மற்றும் உயிர் காக்கும் அவசர சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் செலவிடப்படும் தொகையை திரும்பவும் பெற்றுக்கொள்ளலாம். மகப்பேறு காலத்தில் பெண் தொழிலாளர்களுக்கு 6 மாத காலம் விடுப்புடன் கூடிய ஊதியமும் வழங்கப்படும் பணி ஓய்வு காலத்திலும் அடிப்படை மருத்துவ சிகிச்சையை தொழிலாளர்களும் மற்றும் அவரது துணைவியாரும் பொறுக் கொள்ளலாம். தொழிலாளர்கள் பணிக்காலத்தில் ஏதேனும் விபத்தினால் உடல் ஊனமுற்றால் அவர்கள் இறக்கும் காலம் வரை ஊனத்தின் தன்மைக்கேற்ப ஓய்வூதியமும் பெற்றுக்கொள்ளலாம்.

தொழிலாளர்கள் பணியின் போது ஏதேனும் விபத்தினால் இறக்க நேர்ந்தால், தொழிலாளியின் பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகளுக்கும் ஓய்வூதியமும் வழங்கப்படும். மேலும் தொழிலாளியின் ஈமச்சடங்கிற்கு உதவித் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது

தற்போது பண்ருட்டி, சிதம்பரம் மற்றும் விருத்தாச்சலம் பகுதியில் வசிக்கும் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி காப்பீட்டாளர்கள் ரத்தப் பரிசோதனை, ஸ்கேன், எக்ஸ்ரே போன்றவற்றிற்கு கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் பண்ருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயம், பருத்தி ஆடை நெகிழி, தோல், சிகை அலங்காரம், காகிதம் சார்ந்த, சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளது.

அந்நிறுவனங்களை சார்ந்து 3803 தொழிலாளர் அரசு ஈட்டுறுதி காப்பீட்டாளர்கள் உள்ளனர். சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் 400-கும் மேற்பட்ட நிறுனங்களைச் சார்ந்து 3918 தொழிலாளர் அரசு ஈட்டுறுதி காப்பீட்டாளர்கள் உள்ளனர். விருத்தாச்சலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 80-க்கும் மேற்பட்ட நிறுவனங்களைச் சார்ந்து 3918 தொழிலாளர் அரசு ஈட்டுறுதி காப்பீட்டாளர்கள் உள்ளனர்.

அதன்பேரில் பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாச்சலம் ஆகிய பகுதிகளின் காப்பீட்டாளர்கள் நலன் கருதி பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாச்சலம் பகுதியில் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகங்கள் திறந்து வைக்கப்படுகிறது. காப்பீட்டாளர்கள் மருத்துவச் சிகிச்சை பெறுவதற்கு ஏதுவாக போக்குவரத்து வசதி மிகுந்த மையப்பகுதியில் இம்மருந்தகம் அமைந்துள்ளது.

இதன்மூலம் அப்பகுதி காப்பீட்டாளர்கள், அவர்தம் குடும்பத்தினர் பயன்பெறுவதற்கு வழிவகையாக இருக்கும். ஆகையால் தொழிலாளர்களுக்கு மிகவும் பயனளிக்கும் இத்திட்டத்தில் தனியார் நிறுவனங்கள் தங்களின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களை இணைத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். கொரோனா நோய் தொற்று காலத்தில் கொரோனாவை குறைக்க உலக அளவில் ஆலோசனை பெற்று உரிய நடவடிக்கைகள் எடுத்ததன் விளைவாக தற்போது தமிழகத்தில் கொரோனா படிப்படியாக குறைந்து வருகின்றது.

இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர் கோபாலகிருஷ்ணன், மருத்துவர்கள் ராஜராஜன், மகேஷ், முத்துகுமரன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.