சிவகங்கை

ரேஷன்கடை திறப்பு விழாவில் தகராறு செய்த தி.மு.க. எம்.எல்.ஏ – பொதுமக்கள் கடும் அதிருப்தி

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம், கல்லல் ஒன்றியம், குன்றக்குடி ஊராட்சிக்குட்பட்ட சின்னகுன்றக்குடியில் ரேஷன் கடை திறப்பு விழாவில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினரை முற்றுகையிட்ட பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம், சின்னகுன்றக்குடியில் புதிய நியாயவிலை கடையை திறக்க வேண்டும் என்று அக்கிராம மக்கள் கழக செய்தி தொடர்பாளர் மருதுஅழகுராஜ் மற்றும் கழக நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கை அமைச்சர் அமைச்சர் ஜி.பாஸ்கரன் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயகாந்தன் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து பகுதிநேர நியாயவிலை கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி புதிய ரேஷன்கடை திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குன்றக்குடி அடிகளார், மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், ஆவின்தலைவர் அசோகன் ஆகியோர் பங்கேற்று நியாய விலைக்கடையை திறந்து வைத்தனர்.

கிராம மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற உதவி செய்த கழக செய்தி தொடர்பாளர் மருதுஅழகுராஜை கிராம மக்கள் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். அப்போது அங்கு வந்த சிவகங்கை மாவட்ட தி.மு.க செயலாளரும் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பெரியகருப்பன், அரசு மீது உள்ள மக்களின் நல்ல எண்ணத்தை பொறுத்து கொள்ள முடியாமல் கழக உறுப்பினர்களை வெளியே செல்லும்படி கூச்சலிட்டு தகராறு செய்தார். தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பெரியகருப்பனின் இந்த அராஜக செயல் அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

3 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் ஒரு முறை அமைச்சராகவும் இருந்து பெரிய கருப்பன் செய்யாத பல பணிகளை செய்த மருது அழகுராஜ் மற்றும் கழக நிர்வாகிகளுக்கு ஆதரவாக அப்பகுதி மக்கள் திரண்டனர். அவர்கள் திருப்பத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பெரியகருப்பனுக்கு எதிராக கூச்சலிட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கிராம மக்களின் எதிர்ப்பால் அதிர்ச்சியடைந்த பெரியகருப்பன் மற்றும் ஆதரவாளர்கள் காவல்துறையினரின் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டனர். 3 முறை திருப்பத்தூர் தொகுதியில் வெற்றிபெற்ற தி.மு.க எம்.எல்.ஏ பெரியகருப்பண்ணன், இப்போது மக்களின் செல்வாக்கு அ.தி.மு.க.வுக்கு அதிகரித்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.