தமிழகம்

கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் 7911 பேருக்கு ரூ.5.45 கோடி இழப்பீடு – முதலமைச்சர் தகவல்

சென்னை

கன்னியாகுமரி மாவட்டத்தில் 7,911 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ 5 கோடியே 45 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தொற்றுத் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசியதாவது :-

அம்மாவின் அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பான முறையில் செயல்படுத்தி கொண்டிருக்கிறது. குடிமராமத்து திட்டம் விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமான திட்டம். இந்த மாவட்டத்தை பொறுத்தவரைக்கும் பிரதான தொழில்களான வேளாண் தொழில், மீன்பிடித் தொழில், உணவு பதப்படுத்துதல், கயிறு தயாரிக்கும் தொழில், இரப்பர் பதப்படுத்துகின்ற தொழில் விளங்கிக் கொண்டிருக்கின்றன. இந்தத் தொழில்களை செய்பவர்களுக்கு அரசு முழுமையான உதவிகளை செய்து கொண்டிருக்கின்றது. வேளாண் தொழில் சிறக்க வேண்டுமென்றால் அதற்கு நீராதாரம் மிக முக்கியம். ஒரு மனிதனுக்கு உயிர் எப்படியோ அதைப்போல விவசாயத்திற்கு நீர் முக்கியம்.

அந்த நீரை முழுமையாக வேளாண் மக்களுக்கு தருவது அரசின் கடமை என்ற அடிப்படையில் பல ஆண்டுகாலமாக தூர்வாராத ஏரிகள் எல்லாம் இன்று விவசாய பெருமக்களின் உதவிகளோடு இன்றைக்கு தூர்வாரப்படுகின்ற நிகழ்ச்சியை பார்க்கின்றோம். இந்த மாவட்டத்தில் நல்ல மழைப்பொழிவு ஏற்பட்டிருக்கின்றது. தூர்வாரிய காரணத்தினால் எல்லா ஏரிகளும் நிரம்பி இருக்கின்றன. அதேபோல தடுப்பணைகள் பல இடங்களில் கட்டிக்கொடுத்திருக்கின்றோம். தமிழ்நாட்டில் தடுப்பணைகள் கட்டுவதற்காக, 3 ஆண்டு காலத் திட்டமாக ரூபாய் 1,000 கோடி ஒதுக்கி, கன்னியாகுமரி மாவட்டத்திலும் பல இடங்களில் தடுப்பணைகள் கட்டியிருக்கின்றோம். இதுபோல வருங்காலத்திலும் பொழிகின்ற மழை நீரை அந்தத் தடுப்பணைகளில் சேமித்து நிலத்தடி நீர் உயர்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதோடு, இன்றைக்கு வேளாண் பெருமக்கள் மேன்மையடைய வேண்டுமென்பதற்காக அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றது. தென்னை மதிப்புக் கூட்டுதல் மையம் ரூபாய் 16 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது. கூட்டுப்பண்ணையத் திட்டத்தின் கீழ், ரூபாய் 10 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில்

678 பண்ணை இயந்திரங்கள் வாங்கி, 20,300 சிறு, குறு விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இதற்காக, இந்த ஆண்டு ரூபாய் 2 கோடியே 75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தோவாளையில் வணிக வளாகம் ரூபாய் 6 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தின் கீழ், கடந்த 4 ஆண்டுகளில் 2 கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நுண்ணீர்ப் பாசன அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பயிர்க் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கடந்த 4 ஆண்டுகளில்

7,911 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ 5 கோடியே 45 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு சூரியசக்தி பம்பு செட்டுகளும், சூரியக் கூடார உலர்த்திகளும் மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளன. பண்ணைப் பணிகளை மேற்கொள்வதற்கு 113 விவசாயிகளுக்கு 113 வேளாண் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு பல வகைகளிலும் விவசாய பெருமக்களின் வாழ்வாதாரம் சிறக்க வேண்டும் என்பதற்காக அரசு இப்படிப்பட்ட திட்டங்களை எல்லாம் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றது. மீன்பிடித் தொழில் இங்கு பிரதான தொழிலாக உள்ளது. மீனவர்களுக்குத் தேவையான உதவிகளை அம்மாவின் அரசு செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறது. புதிய தூண்டில் முறை, சூரை மீன் பிடிப்பு மற்றும் செவுள்வலை விசைப்படகுகளுக்கு

ரூபாய் 60 லட்சத்தில் 50 சதவிகிதம் அல்லது அதிகபட்சம் 30 லட்சம் ரூபாய் மானியமாக 16 பயனாளிகளுக்கு இந்த மாவட்டத்தில் விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒகி புயலினால் பாதிக்கப்பட்ட 11 மீனவர்களுக்கு இத்திட்டத்தில் படகு கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள 100 மீனவர்களுக்கு 75 சதவிகித மானிய விலையில் செயற்கைக்கோள் தொலைபேசிகள் வழங்கப்பட்டுள்ளன. மீன்வளத் துறையில் 2020-ம் ஆண்டில் மீன்பிடி தடைகால நிவாரண நிதியாக ரூபாய் 5 ஆயிரம் வீதம் 27,517 நபர்களுக்கு இந்த மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.