சிறப்பு செய்திகள்

பள்ளிகள் திறப்பு பற்றி விரைவில் அரசு அறிவிப்பு – முதலமைச்சர் பேட்டி

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டங்களுக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி: பள்ளிகள் திறப்பது தொடர்பாக கேட்பு கூட்டம் நடைபெற்றது. திட்டமிட்டபடி 16.11.2020 அன்று பள்ளிகள் திறக்கப்படுமா? அல்லது தள்ளிப்போகுமா?

பதில்: நேற்று தான் (9ம்தேதி) கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. அது அரசின் ஆய்வில் இருக்கின்றது. அரசு உயர் அதிகாரிகள், சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த ஆய்வின்படி விரைவாக அறிவிக்கப்படும்.

கேள்வி: இலங்கையில் 121 படகுகளை அழிக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதே…

பதில்: நல்ல நிலையிலுள்ள படகுகளை நம் மீனவர்கள் எடுத்து வந்துள்ளனர். எடுத்து வர இயலாத நிலையிலுள்ள படகுகள் அங்கு நின்றிருப்பதாக தகவல் வந்திருக்கின்றது. மேலும், அங்கிருக்கின்ற நீதிமன்றம் அந்தப் படகுகள் பழுதாகியுள்ளதால் அவற்றை அழிக்கச் சொல்லி இருக்கின்றது.

கேள்வி: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டுமென்று தமிழக அரசு பரிந்துரை செய்திருந்தும் கவர்னர் இதுவரை அனுமதி அளிக்கவில்லை. அரசுப் பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்க நீங்கள் தனி ஆணை பிறப்பித்து நடவடிக்கை எடுத்தீர்கள். அதுபோல ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கும் நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருக்கிறதா?

பதில்: இது வேறு, அது வேறு, இதில் சட்ட சிக்கல்கள் இருக்கின்றன. அது உள்ஒதுக்கீடு, அரசினுடைய அதிகாரத்திற்கு உட்பட்டது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் உள்ஒதுக்கீடு செய்வதற்கு மாநில அரசிற்கு உரிமை உண்டு என்று தீர்ப்பு கொடுத்து அந்த அடிப்படையில் நாங்கள் உள்ஒதுக்கீடு கொடுத்திருக்கின்றோம்.

கேள்வி: கன்னியாகுமரி மாவட்டத்தில் புற்றுநோய்த் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே, சிகிச்சை மையம் ஒன்று அமைக்க வைக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளார்களே?

பதில்: இதுவரை ஆய்வில் அப்படியேதும் கிடைக்கப் பெறவில்லை. நீங்கள் புதிய கேள்வி கேட்டிருக்கிறீர்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வளவு நோய் வந்திருக்கின்றது என்ற ஆய்வறிக்கையை அரசு பார்க்கும். அதன்படி இருந்தால் அரசு அதை ஆய்வு செய்யும்.

கேள்வி: இடதுகரை கால்வாயில் கடந்த 17 ஆண்டுகளாக தண்ணீர் வராததால் விளவங்கோடு தாலுகா விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனரே?

பதில்: இதைப்பற்றி நான் ஏற்கனவே கேரளா அரசோடு பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்கின்றேன். பேச்சுவார்த்தை இரண்டு மூன்று கட்டங்களாக நடந்து கொண்டிருக்கின்றது. இதனால், நம்முடைய விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள விவரத்தை கேரள அரசிடம் கேட்டுள்ளோம். இதுமட்டுமல்ல, இரண்டு மாநிலங்களுக்கிடையான நதி நீர்ப் பிரச்சனைகளையெல்லாம் பேசிக் கொண்டிருக்கின்றோம், இதையும் எடுத்து சொல்லியிருக்கிறோம்.

கேள்வி: கன்னியாகுமரி வனப் பாதுகாப்புச் சட்டம்…

பதில்: வனப் பாதுகாப்புச் சட்டம் ஏற்கனவே அரசின் பரிசீலனையில் உள்ளது.

கேள்வி: தேங்காய்ப்பட்டினத்தில் தனியார் மீன்பிடித் துறைமுகத்தை வருவாய்த்துறையை சேர்ந்த ஒருவர் நடத்திக் கொண்டிருக்கிறார் என்று புகார்கள் வந்து கொண்டிருக்கிறதே?

பதில்: அதுபோல் இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை. இப்பொழுதுகூட தேங்காய்ப்பட்டினத்தில் உள்ள துறைமுகத்தில் சில பிரச்சனைகள் இருப்பதை தேங்காய்ப்பட்டினத்தில் இருக்கின்ற மீனவர்கள், பாதிரியார்கள் கோரிக்கையாக அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். அரசு அந்தப் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். நீங்கள் தெரிவித்த கருத்து புதியதாக இருக்கின்றது. அப்படி ஏதாவது இருந்தால் எழுத்து மூலமாக கொடுங்கள் அரசு அதை பரிசீலிக்கும்.

கேள்வி: கேரளாவில், சிபிஐ விசாரணை நடத்துவதற்கு அந்த மாநிலத்தின் அனுமதி பெற வேண்டுமென கோரிக்கை வைத்தார்கள். தமிழ்நாட்டில், தலைமைச் செயலகத்திலேயே சிபிஐ…

பதில்: ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு கோரிக்கை இருக்கின்றது. எல்லா மாநிலங்களிலும் செய்வதை நம் மாநிலமும் செய்ய வேண்டுமென்ற அவசியம் இல்லை. ஒரு காலத்தில் அவ்வாறு வந்தால் பரிசீலிக்கப்படும்.

கேள்வி: சென்னை மதுரவாயல் துறைமுகம் பகுதியில் இருக்கக்கூடிய பறக்கும் சாலை திட்டம் கலைஞரால் தொடங்கப்பட்டது…

பதில்: இங்கேயுள்ள பிரச்சனையைப் பற்றிக் கேளுங்கள். கன்னியாகுமரி பிரச்சனையை கேட்காமல் சென்னையிலுள்ள பிரச்சனை இங்கு ஏன்? ஏற்கனவே மத்திய அரசாங்கம் ஆய்வு செய்து அந்தப் பணிகள் விரைவில் துவங்கப்படவுள்ளது. மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி ஒரு வாரத்திற்கு முன்பாக சென்னை வந்தார், அவர்களிடம் எடுத்துச் சொல்லியுள்ளோம், அந்த பணிகள் விரைவில் துவங்கப்படும்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.