தமிழகம்

குழித்துறையில் ரூ.31 கோடியில் குடிநீர் அபிவிருத்தி திட்டம் – முதலமைச்சர் தகவல்

சென்னை

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சி0யில் ரூ.31 கோடியில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டங்களுக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 2020-21-ம் ஆண்டில் 80 ஊராட்சிகளில் உள்ள 608 குக்கிராமங்களில் 63,680 வீடுகளுக்கு ரூபாய் 47.76 கோடி மதிப்பீட்டில் வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு வழங்க ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பல்வேறு பணிகள் இந்த மாவட்டத்தில் நடைபெற்று வருகின்றன. நாகர்கோவில் நகராட்சியில் பாதாளச் சாக்கடைத் திட்டத்திற்காக ரூ.76.04 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மிகச் சிறப்பாக

நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அழகிய பாண்டியபுரம் கூட்டுக்குடிநீர் திட்டமானது ரூ.109.79 கோடி மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்பட்டு இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அந்தப் பணிகள் முழுவதும் நிறைவு பெற்று இந்தப் பகுதி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். இரணியல் கூட்டுக்குடிநீர் திட்டம் இரணியல் பேரூராட்சி மற்றும் 319 கிராம

குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் ரூ.174 கோடியில் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது 71 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. எஞ்சிய பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாகர்கோவில் நகராட்சியில் குடிநீர் அபிவிருத்தித் திட்டப் பணிகள் ரூபாய் 251.43 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறன. தற்பொழுது, 77 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. எஞ்சிய பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழித்துறை நகராட்சியில் குடிநீர் அபிவிருத்தி திட்டப் பணிகள் ரூ.31 கோடி திட்ட மதிப்பீட்டில் செயல்படுத்த ஒப்பந்தப் புள்ளி இறுதி செய்யப்பட்டுள்ளது.

2020-ம் ஆண்டில் மீன்பிடித் தடைக் கால நிவாரண நிதியாக ரூபாய் 5 ஆயிரம் வீதம் கன்னியாகுமரி மாவட்டத்தில் 27,517 நபர்களுக்கு கடல் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. புதிய தூண்டில்முறை சூரை மீன்பிடிப்பு மற்றும் செவுள்வலை விசைப்படகுகள் கட்டுவதற்கு ரூபாய் 60 லட்சத்தில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.30 லட்சம் மானியமாக 16 பயனாளிகளுக்கு கொடுப்பதற்கு இன்றைக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒகி புயலினால் பாதிக்கப்பட்ட 11 மீனவர்களுக்கு, இத்திட்டத்தின் கீழ் படகு கட்டுமான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறன. ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள 100 மீனவர்களுக்கு 75 சதவீதம் மானிய உதவியில் செயற்கைக்கோள் தொலைபேசிகள் வழங்கப்பட்டுள்ளது.

வேளாண்மைத் துறையில், செண்பகராமன்புதூரில், தென்னை மதிப்புக் கூட்டுதல் மையம் ரூபாய் 16 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது. கூட்டுப்பண்ணையத் திட்டம் செயல்படுத்தவுள்ளோம். தோவாளையில் வணிக வளாகம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ், கடந்த நான்காண்டுகளில் ரூபாய் 2 கோடியே 4 லட்சம் மானியத்தில் நுண்ணீர் பாசனஅமைப்புகள் 1,453 ஏக்கரில் நிறுவப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இத்திட்டத்திற்காக ரூபாய் 4 கோடியே 17 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.

பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த நான்காண்டுகளில் 7,911 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக 5 கோடியே 45 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 59 விவசாயிகளுக்கு சூரிய சக்தி பம்பு செட்டுகளும், 13 விவசாயிகளுக்கு சூரிய கூடார உலர்த்தியும் ரூபாய் 2 கோடியே 16 லட்சத்து 23 ஆயிரம் மானியத்தில் அமைக்கப்பட்டுள்ளன. பண்ணைப் பணிகளை மேற்கொள்வதற்கு 113 விவசாயிகளுக்கு 113 வேளாண் இயந்திரங்கள் 1 கோடியே 24 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது. தென்னையில் சுருள் வெள்ளை ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்திட நடப்பாண்டில் நிதி ஒதுக்கப்பட்டு, பயிர்ப் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.