சிறப்பு செய்திகள்

பட்டாசு ஆலை தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் – அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை

கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2022-ம் ஆண்டின் முதல் நாளே விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த வடுகப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட களத்தூர் கிராமத்தில் ஆர்.கே.வி.எம்.பட்டாசு ஆலையில் திடீரென்று ஏற்பட்ட வெடிவிபத்தில் நான்கு பேர் உயிரிழந்த செய்தியையும், ஒரு பெண் உட்பட எட்டு பேர் படுகாயமடைந்த நிலையில் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியையும் அறிந்து ஆற்றொணா துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

ஆங்கில புத்தாண்டு தினத்தன்று காலை ஒன்பது மணியளவில் மேற்படி தொழிற்சாலையில் வெடிமருந்து சேமிப்பு கிடங்கின் வேதியியல் நிரப்பும் கூடாரத்தில் கூட்டு பொருளை கலக்கும்போது ஏற்பட்ட ரசாயன எதிர்விளைவின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டதாகவும், இந்த விபத்தில் மேட்டுப்பட்டியை சேர்ந்த எஸ்.குமார், சேர்வைக்காரன்பட்டியை சேர்ந்த பி.சரவணன் மற்றும் பாரைப்பட்டியை சேர்ந்த எஸ்.வீரகுமார் மற்றும் எம்.முருகேசன் ஆகியோர் உயிரிழந்ததாகவும்,

முனியாண்டி, கோபாலகிருஷ்ணன், முனியசாமி, வேல்முருகன், காளியப்பன், அழகர்சாமி, பெண் தொழிலாளி கனகரத்தினம் மற்றும் சிறுவன் மனோ அரவிந்த் ஆகியோர் படுகாயமடைந்துள்ளதாகவும், இவர்களில் ஆறு பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இருவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்து கொள்கிறேன். படுகாயமடைந்து அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

விபத்து ஏற்பட்ட ஆலையின் தொழிலாளர்கள் தீபாவளிக்கு பிறகு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்ததாகவும், மூன்று நாட்களுக்கு முன்பு தான் மேற்படி ஆலை செயல்பட துவங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அப்படியென்றால், கிட்டதட்ட இரண்டு மாதங்கள் மேற்படி பட்டாசு ஆலை மூடிய நிலையில் இருந்திருக்கிறது.

இரண்டு மாதங்கள் கழித்து பட்டாசு தொழிற்சாலை திறக்கப்படுகிறது என்றால், திறப்பதற்கு முன்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆலை நிர்வாகம் மேற்கொள்வதும், பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆலை நிர்வாகத்தால் சரியாக மேற்கொள்ளப்பட்டு இருக்கிறதா என்பதை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் கண்காணிப்பதும் அவசியம். இது மட்டுமல்லாமல் காலமுறை ஆய்வும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேலும், தகுதி வாய்ந்த வேதியியலர் மேற்படி ஆலையில் பணியமர்த்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இவைகள் பின்பற்றப்பட்டதா என்று தெரியவில்லை. இது தவிர மேற்படி விபத்தில் சிறுவன் மனோ அரவிந்த் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

பட்டாசு ஆலையில் குழந்தைகளை வேலைக்கு அமர்த்தக்கூடாது என்று 1986-ம் ஆண்டு குழந்தை தொழில் (தடை மற்றும் முறைப்படுத்துதல்) சட்டத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இருப்பினும் இந்த சட்டத்தினை முற்றிலும் புறக்கணிக்கும் வகையில் சிறுவன் மனோ அரவிந்த் மேற்படி ஆலையில் பணிபுரிந்தது சட்ட விரோதமானது. மேலும், விடுமுறை நாளில் தொழிலாளர்கள் பணிபுரிவதற்கான அவசியம் குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.

இவற்றையெல்லாம் ஆய்வு செய்து சட்டத்திற்கு புறம்பாக நடந்து கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இனி வருங்காலங்களில் இதுபோன்ற விபத்துகள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு இருக்கிறது.

மேற்படி விபத்திற்கு ஆலை நிர்வாகத்தின் கவனக்குறைவே காரணம் என்ற சூழ்நிலையில் ஆலை உரிமையாளர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை தேடும் பணியில் காவல் துறை ஈடுபட்டிருந்தாலும், பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் இனிவரும் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசாங்கம் உடனடியாக எடுக்க வேண்டும் என்றும்,

ஆலை நிர்வாகத்திடமிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், படுகாயமடைந்துள்ளவர்களுக்கும் இழப்பீடு பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பட்டாசு ஆலைகளில் தகுதி வாய்ந்த வேதியியலர்கள் இருக்கின்றார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், விபத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

எனவே, மேற்படி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தேவையான நடவடிக்கையை முதலமைச்சர் உடனடியாக எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.