தற்போதைய செய்திகள்

அம்மா சொன்னது போல் கழகம் 100 ஆண்டுகள் ஆட்சி செய்யும் – மாவட்ட செயலாளர் குமரகுரு பேச்சு

கள்ளக்குறிச்சி

அம்மா சொன்னது போல் கழகம் 100 ஆண்டுகள் ஆட்சி செய்யும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் குமரகுரு கூறினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நகர கழகம் சார்பில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உளுந்தூர்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளருமான இரா.குமரகுரு கலந்து கொண்டு பாசறை நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான புத்தகத்தை வழங்கினார்.

இக்கூட்டத்திற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஞானவேல், மாவட்ட பாசறை செயலாளர் ராகேஷ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சீனிவாசன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்அணி செயலாளர் செந்தில்குமார், நகர செயலாளர் துரை, ஒன்றிய செயலாளர்கள் மணிராஜ், பழனிவேல், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் சாய்ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் வளர்மதி பாண்டியராஜன், முன்னாள் அவைத்தலைவர் ராமசாமி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணைச் செயலாளர் ஆறுமுகம், நகர இளைஞரணி செயலாளர் ராமலிங்கம், ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் சக்திவேல், நகர துணை செயலாளர் கஜேந்திரன், நகர பாசறை செயலாளர் திருப்பதி, நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சாய்அருண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் இரா.குமரகுரு பேசியதாவது:-

இளைஞர் பாசறை நிர்வாகிகள் தங்கள் பகுதி பிரச்சினைகளை அறிந்து அதை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பொழுது தான் கழகத்தின் மீது நம்பிக்கை வரும். அந்த நம்பிக்கையை நாம் வாக்குகளாக மாற்ற முடியும். ஆனால் திமுகவோ பொய் சொல்லி மக்களை திசை திருப்புகின்றனர். ஸ்டெர்லைட், காவேரி, நீட் போன்ற பிரச்சினைகளுக்கு அடிக்கோலிட்டது திமுக தான்.

ஆனால் அம்மாவின் அரசோ மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் ஆட்சி. அம்மாவின் திட்டங்கள் அனைத்தும் மகளிரையே மையமாக கொண்டிருக்கும். தாலிக்கு தங்கம், அம்மா ஸ்கூட்டர், அம்மா பரிசு பெட்டகம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றிய தலைவர் அம்மா மட்டும் தான். முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து கொரோனா தடுப்பு நடவடிக்கை, வளர்ச்சி திட்டப்பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்கள்.

அம்மாவின் அரசானது விழுப்புரம் மாவட்டத்திற்கு ஒரு பல்கலைக்கழகம், சட்டக்கல்லூரி, கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு புதிய மருத்துவ கல்லூரி ஆகியவற்றை வழங்கியுள்ளது. மேலும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு செல்ல 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு சட்டத்தை இயற்றியுள்ளனர். இவற்றையெல்லாம் கூறி எடப்பாடி கே.பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக்க இந்த இளைஞர் படையானது அரும்பாடுபட வேண்டும். அப்பொழுது தான் அம்மா அவர்கள் கூறியது போல கழகம் 100 ஆண்டுகள் ஆட்சி செய்யும்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் இரா.குமரகுரு பேசினார்.