சிறப்பு செய்திகள்

மனு கொடுத்த 2 மணி நேரத்தில் பெண்ணுக்கு அரசு பணி வழங்கிய முதல்வர்.

தூத்துக்குடி

முதலமைச்சரிடம் வேலை வேண்டி தூத்துக்குடியில் மனு அளித்து பணி நியமன ஆணை பெற்ற மாற்றுத்திறனாளி பெண் மாரீஸ்வரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

என் பெயர் மாரீஸ்வரி (29). எனக்கு ஷாலினி என்ற பெண் குழந்தை உள்ளது. என் கணவர் தினக்கூலி வேலை செய்து வருகிறார். நான் முத்தையாபுரத்தில் வசித்து வருகிறேன். எம்.ஏ., தமிழ் படித்துள்ளேன். அதோடு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டிலும் டைப்ரைட்டிங் பயிற்சி பெற்றுள்ளேன். இந்நிலையில் நேற்று முதலமைச்சர் தூத்துக்குடிக்கு வருகை தந்த போது, முதலமைச்சரிடம் வேலை வேண்டி மனு அளிக்க முடிவு செய்து சாலையோரம் மனுவோடு காத்திருந்தேன்.

அந்தவழியாக முதலமைச்சர் காரில் வந்து கொண்டிருந்தார். நான் மனு வைத்திருப்பதை அறிந்தவுடன் என்னை அழைத்து என்ன வேண்டுமென்று கேட்டார். நான் எனக்கு அரசு வேலை வேண்டுமென்று கேட்டு என்னிடமிருந்த மனுவை அவரிடம் வழங்கினேன். அவர் உடனடியாக ஆவண செய்வதாக தெரிவித்து சிறிது நேரத்தில் என்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருமாறு எனக்கு அழைப்பு விடுத்தார். நான் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டேன். அங்கு எனக்கு பணி நியமன ஆணையை வழங்கினார். என்னைப் போன்றவர்களுக்கு முதலமைச்சர் உதவிகளை செய்வதற்கு இதுவே ஒரு உதாரணமாகும்.

நான் ஏற்கனவே வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தேன். மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்திருந்தேன். இந்நிலையில் நேற்று எனக்கு முதலமைச்சரிடம் மனு அளித்தவுடன் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வார்டு மேலாளர் பதவிக்கான பணி நியமன ஆணையை என்னிடம் வழங்கினார். மனு அளித்தவுடன் எனக்கு வேலை வழங்கிய முதலமைச்சருக்கு நானும் எனது குடும்பமும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு மாற்றுத்திறனாளி பெண் மாரீஸ்வரி கூறினார்.