தற்போதைய செய்திகள்

1245 பேருக்கு முதியோர் ஓய்வூதிய திட்ட ஆணை – அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பகுதியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் 1245 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள் தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும் எண்ணற்ற திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். மேலும், மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுகின்ற வகையில் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் என அனைவரும் நேரடியாக மக்களை தேடிச்சென்று மக்களிடம் மனுக்கள் பெற வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி மக்களின் இருப்பிடத்திற்கே சென்று அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தருகின்ற வகையில் மனுக்களாக பெற்று குறுகிய காலத்தில் தீர்வு காணப்பட்டு அதற்குரிய நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் பொது மக்களால் பாராட்டப்பெற்ற திட்டமாக அமையப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
முதியோர்களின் நலன் காக்கப்படுகின்ற வகையில், வயது முதிர்வின் காரணமாக உழைத்து வருவாய் ஈட்டி வாழ முடியாமலும் உறவினர்களின் ஆதரவற்ற நிலையில் வாழும் முதியோர்களுக்கு அவர்களின் துயரத்தை நீக்கிடும் வகையில் முதியோர் ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தமிழக அரசால் வழங்கப்படும் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் இதுவரை திருவாரூர் மாவட்டத்தில் 48444 நபர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது. வலங்கைமான் பகுதியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 1245 முதியோர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்திற்கான ஆணை வழங்கப்பட்டது. எல்லா நிலைகளிலும், எல்லா காலங்களிலும் தமிழக மக்களை காக்கின்ற அரசாக தமிழக அரசு விளங்குகிறது.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் பாலசந்திரன், ஆதிதிராவிடர் நல அலுவலர் பூஷணகுமார், சமூகப்பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் ராமசந்திரன், ஒன்றியக்குழு தலைவர் சங்கர், நீடாமங்கலம் பால் கூட்டுறவு சங்கத்தலைவர் இளவரசன், ஒன்றிய குழு துணைத்தலைவர் ஆர்.வாசுதேவன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தலைவர் சா.குணசேகரன், முன்னாள் பேரூராட்சி மன்றத்தலைவர் ஜெயபால், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சாந்தி தேவராஜன், கூட்டுறவு வங்கித்தலைவர் ஜே.இளங்கோவன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.