தமிழகம்

ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய முதல் இந்திய பெண் வேலு நாச்சியார் – எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் புகழாரம்

சென்னை

ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய முதல் இந்திய பெண்மணி வீரமங்கை வேலு நாச்சியார் என்று எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் புகழாரம் சூட்டியுள்ளார்.

இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடிய முதல் இந்திய பெண்மணி என்ற பெயரை பெற்றவரும், வாள் வீச்சு, அம்பு எறிதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம் என பல்வேறு போர் கலைகளை கற்றறிந்தவரும், பல மொழிகளில் புலமை பெற்றவரும், சிவகங்கை சீமை மன்னர் பதவியை வகித்தவருமான வீரமங்கை வேலு நாச்சியார் பிறந்த நாளில் அவருக்கு எனது வீர வணக்கத்தினை செலுத்துகிறேன்.

வீரமங்கை வேலு நாச்சியாரின் நினைவை போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் மணிமண்டபம் அமைத்ததோடு அவரது பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்தவர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் என்பதை இந்த தருணத்தில் நினைவுகூர்ந்து, இந்திய திருநாட்டின் விடுதலைக்காக அவர் செய்த தியாகம் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.