சிறப்பு செய்திகள்

ஹஜ் பயண புறப்பாடு இடங்கள் பட்டியலில் சென்னையை இடம்பெற செய்ய வேண்டும் – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்

சென்னை

ஹஜ் பயண புறப்பாடு இடங்களின் பட்டியலில் சென்னையை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் சென்னையை புறப்படும் இடமாக கொண்டு தமிழகம் உள்பட அருகிலுள்ள மாநிலங்களை சேர்ந்த 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் ஹஜ் பயணமாக சவூதி அரேபியா செல்வது வழக்கம். இதற்கு வசதியாக கடந்த 1987-ம் ஆண்டு முதல் சென்னையில் இருந்து ஜட்டாவுக்கு நேரடி விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வசதி மூலம் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளை சேர்ந்த ஹஜ் பயணிகள் பயன்பெற்று வருகின்றனர்.

கொரோனா நோய் தொற்று காரணமாக இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து புறப்படும் இடங்களின் பட்டியலில் இருந்து சென்னை நீக்கப்பட்டுள்ளது.மேலும் புறப்படும் இடங்களின் எண்ணிக்கையும் 21-லிருந்து 10-ஆக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த ஹஜ் பயணிகளுக்கு கொச்சி நகரம் புறப்படும் இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் இருந்துஹஜ் பயணம் மேற்கொள்ளும் மூத்த குடிமக்களுக்கு மிகப்பெரிய சிரமத்தை ஏற்படுத்தும். தமிழகத்தில் இருந்து கொச்சி சென்று அங்கியிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்வதில் உள்ள பல்வேறு சிரமங்களை அந்தப் பயணத்தை மேற்கொள்பவர்கள் எனது கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.

தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளும் யாத்ரீகர்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டுகளை போன்று இந்த ஆண்டிலும் சென்னையை புறப்பாடு இடமாக அறிவிக்க வேண்டும். சென்னையில் இருந்து யாத்ரீகர்களை அனுப்பும் போது கொரோனா நோய் தொற்றுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து விதிமுறைகளையும் தமிழக அரசு உறுதிப்படுத்தும். எனவே உனடியாக, சென்னையை புறப்பாடு இடமாக அறிவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.