தற்போதைய செய்திகள்

தமிழகத்தின் உரிமைகளை மீட்டு தந்தது கழக அரசு – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பெருமிதம்

திருவண்ணாமலை

எந்த பிரச்சினை ஆனாலும் கழக ஆட்சியில் சுமூகத் தீர்வு காணப்பட்டுள்ளது என்றும், தமிழகத்தின் உரிமைகளை மீட்டு தந்தது கழக அரசு என்றும் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கூறினார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். அவர்களை வரவேற்று அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசியதாவது:-

முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் தலைமையில் நடைபெறும் சிறப்பான ஆட்சியில் தமிழக மக்களுக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. முல்லை பெரியாறு பிரச்சினை, காவேரி பிரச்சினை உள்ளிட்ட எந்த பிரச்சினையானாலும் கழக ஆட்சியில் சுமூக தீர்வு காணப்பட்டுள்ளது. தி.மு.க.வால் பறிபோன ஜல்லிக்கட்டு உள்ளிட்ட தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை கழக அரசு தான் மீட்டு தந்தது.

காவேரி டெல்டா விவசாய பகுதிகளை பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள குளம், குட்டைகள், ஏரிகளை குடிமராமத்து திட்டத்தின் மூலம் தூர் வாரப்பட்டு உள்ளது. இப்படி எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் கழக அரசு தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியமைக்க அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

முதலமைச்சர் ஆணைக்கிணங்க ஆரணி சட்டமன்ற தொகுதியில் ஆரணி கைலாய நாதர் கோயில், ஆரணி ஸ்ரீனிவாச பெருமாள் கோயில், கொளத்தூர், காமக்கூர், தேவிகாபுரம், எஸ்.வி.நகரம், ஆகிய பகுதியில் உள்ள கோயில்களுக்கு புதிதாக தேர் செய்யப்பட்டுள்ளது, லாடப்பாடி, கல்பூண்டியை இணைக்கும் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.

கொளத்தூர், காமக்கூர், விண்ணமங்கலம், குண்ணத்தூர், அம்மாபாளையம், சுபான்ராவ்பேட்டை, உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது, ஆரணி முழுவதும் சுமார் ரூ.50 கோடி மதிப்பில் தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது, ஆரணிக்கு கோட்டாட்சியர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆரணி கோட்டை மைதானத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

ஆரணிக்கு டிசம்பர் மாதம் காவேரி குடிதண்ணீர் வர இருக்கிறது. சேவூர் பேருந்து நிலையம் ரூ.25 லட்சத்திலும், கண்ணமங்கலத்தில் பேருந்து நிலையம் ரூ.25 லட்சத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. இப்படி எண்ணற்ற திட்டங்களை வாரி வழங்கும் கழக அரசு மீண்டும் ஆட்சியில் அமர அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை மீண்டும் முதல்வராக்குவோம்.

இவ்வாறு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் வக்கீல் க.சங்கர், மாவட்ட ஆவின் துணைத்தலைவர் பாரி பி.பாபு, மாவட்ட பொருளாளர் அ.கோவிந்தராசன், ஒன்றிய செயலாளர்கள் பி.ஆர்.ஜி.சேகர், ஜி.வி.கஜேந்திரன், ப.திருமால், மேற்கு ஆரணி ஒன்றியக்குழு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் ஜோதிலிங்கம், நகர மாணவரணி செயலாளர் கே.குமரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.