தற்போதைய செய்திகள்

குப்பநத்தம் நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு – சிக்கனமாக பயன்படுத்த அமைச்சர் வேண்டுகோள்

திருவண்ணாமலை

குப்பநத்தம் நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்ட அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், குப்பநத்தம் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக 28 ஏரிகளுக்கு 12 நாட்களுக்கு நேற்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தண்ணீரை திறந்து விட்டார்.

அதனை தொடர்ந்து அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

‘புரட்சித்தலைவி அம்மா வழியில் செயல்பட்டு வரும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரின் ஆணைக்கிணங்க, வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், குப்பநத்தம் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக 28 ஏரிகளுக்கு 17.11.2020 முதல் 29.11.2020 வரை 12 நாட்களுக்கு, 252.26 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்தில் உள்ள 4498.25 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

குப்பநத்தம் அணையில் தற்போது 392.80 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அடிப்படைத் தேவைக்கான குடிநீர், அணை பராமரிப்பு மற்றும் நீர் ஆவியாதல் மூலம் ஏற்படும் இழப்பும் சேர்ந்து 135.51 மில்லியன் கன அடி தண்ணீர் தேவை. ஆகவே, அணையில் மீதம் உள்ள நீர் 257.29 மில்லியன் கன அடி பாசனத்திறகான நீர் இருப்பு ஆகும். பாசன நீரை சிக்கனமாகவும் துறை பணியாளர்களின் அறிவுரைப்படியும் சிறந்த முறையில் பயன்படுத்தி நல்ல விளைச்சல் பெற்றிட எல்லா வகையிலும் ஒத்துழைக்குமாறு பாசன ஆயக்கட்டுதாரர்களை கேட்டுக்கொள்கிறேன். அறிவிக்கப்பட்ட தேதிக்கு பின்னர் எக்காரணத்தை கொண்டும் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கும் தேதி நீட்டிக்கப்பட மாட்டாது.

இவ்வாறு அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கூறினார்.