தற்போதைய செய்திகள்

நுண்ணீர் பாசனத் திட்டத்தில் தமிழகம் முன்னோடி மாநிலம் – மாநில வளர்ச்சி கொள்கைக் குழு துணைத்தலைவர் பெருமிதம்

சென்னை

நுண்ணீர் பாசனத் திட்டத்தில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று மாநில வளர்ச்சி கொள்கை குழுவின் துணைத்தலைவர் சி.பொன்னையன் பெருமிதத்துடன் கூறினார்.

“வேளாண்துறையில் சிறந்த நடைமுறைகளின் தொகுப்பு மற்றும் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் நடைமுறைகள் / திட்டங்கள் / கொள்கைகளுடன் ஒப்பீடு” குறித்த காணொலி வாயிலான கருத்தாய்வு கூட்டம், மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத்தலைவர் சி.பொன்னையன் தலைமையில் நேற்று காலை எழிலகத்தில் உள்ள மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் உறுப்பினர்-செயலர் அனில் மேஷ்ராம், துறைசார்ந்த உயர் அலுவலர்கள் மற்றும் வல்லுனர்கள் கலந்து கொண்டனர்.

செப்டம்பர் 2020-ல் நிதி ஆயோக் வெளியிட்ட சிறந்த நடைமுறைகளின் தொகுப்பின் அடிப்படையில், வேளாண் துறையில் சிறந்த மற்றும் புதுமையான நடைமுறைகளை முன்னிலைப்படுத்தும் காணொலி கருத்தரங்கு மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டது.

தமது துவக்க உரையில், வேளாண்துறை உணவு உற்பத்திக்கு மட்டுமல்லாமல் பிற தொழில்களுக்கான மூலப்பொருட்களை வழங்குவதற்கும் இன்றியமையாதது எனவும், விவசாயிகள் “இருமடங்கு உற்பத்தி மும்மடங்கு வருமானம்” என்ற இலக்கினை அடையும் முனைவில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது எனவும் துணைத்தலைவர் தெரிவித்தார்.

தமிழக அரசு நீடித்த மானாவாரி விவசாயத்திற்கான இயக்கம், கூட்டுப் பண்ணையம், ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டம், விநியோகத் தொடர் மேலாண்மை, மின்னணு வர்த்தக வசதிகள் போன்ற புதுமையான திட்டங்களை செயல்படுத்தி விவசாயிகள் வேளாண்மையில் அதிக இலாபம் பெற உதவிவருகிறது.

சமீபத்திய ஆண்டுகளில் தமிழ்நாடு உணவு தானிய உற்பத்தியில் அடைந்துள்ள சாதனைகளை சிறப்பித்து, மத்திய அரசு, 5 முறை வேளாண் விருதான கிரிக்ஷி கர்மான் விருதினை வழங்கியுள்ளது. மேலும், இதுவரை இல்லாத சாதனையாக, 2019-2020-ம் ஆண்டில், 2.63 லட்சம் எக்டர் பரப்பில் நுண்ணீர் பாசன அமைப்பு நிறுவப்பட்டு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக திகழ்கிறது.

முதலமைச்சர் வெளியிட்டுள்ள வேளாண் உற்பத்தியாளர் அமைப்புக் கொள்கை மூலம் விவசாயிகள் மற்றும் வேளாண் உற்பத்தியாளர்கள் பயனடைந்து வருகின்றனர். பண்ணைப் பொருட்களின் மதிப்பு கூட்டலை ஊக்குவிக்கவும், உணவு பொருட்கள் வீணாவதை குறைக்கவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், தமிழ்நாடு உணவு பதப்படுத்தும் கொள்கை திட்டத்தை மாநில அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

உலகளாவிய சிறந்த நடைமுறைகளான வங்காளதேசத்தின் மிதக்கும் தோட்டம், வேளாண் விளைபொருட்களை செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி தரப்படுத்துதல், அலைபேசி மென்பொருள் மூலம் முன்கணிப்பு முறைகளை வேளாண்மையில் பயன்படுத்துதல், “e-சௌபால்” என்ற மின்னணு வர்த்தக முறை, ஆஸ்திரேலியாவின் தோட்டக்கலையில் புதுமைகள், பயிர்களில் பூச்சித் தாக்குதலை முன்கணித்தல், கரும்பு உற்பத்தியின் மதிப்புக்கூட்டு முறைகளில் பெண் விவசாயிகள் பங்களிப்பை வலுவாக்குதல், நுண்ணீர் பாசன திட்டத்தில் பங்கேற்பு நீர் பாசன மேலாண்மை, உள்ளுறை கால வேளாண் தொழில்நுட்பங்களுக்கான இணையம், கடலோர பகுதி நிலங்களில் உப்புத்தன்மை கட்டுப்படுத்துதல் போன்றவை கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், தமிழகத்தில் செயல்படுத்தப்படும் சிறந்த நடைமுறைகளை பற்றிய படத்தொகுப்பு வேளாண்துறையால் விளக்கப்பட்டது. இதில், அனைத்து கிராமங்களிலும் பழம் மற்றும் காய்கறி பயிர்கள் சாகுபடியினை செயல்படுத்துவதற்கும், 2023-ல் 100 சதவீதம் நுண்ணீர் பாசன திட்டத்தை செயல்படுத்துவதற்கும் முனைந்து, பல்வேறு சிறப்பு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது என தெரிவிக்கப்பட்டது.

துணைத்தலைவர் தனது நிறைவுரையில் திருவள்ளூரில் உள்ள அங்கக வேளாண் பண்ணையில் துல்லிய கவாத்து முறையினை மேற்கொண்டு கொய்யாவில் அதிக மகசூல் மற்றும் திரட்சியான பழங்கள் உற்பத்தி செய்வதை அண்மையில் பார்வையிட்டதை நினைவு கூர்ந்து, இதுபோன்ற குறைந்த செலவில் அதிக வருமானம் தரக்கூடிய எளிமையான முறைகள் பற்றிய அறிவுச் செறிவினை மாநிலத்தில் கண்டறிந்து பரவலாக செயல்படுத்த விளம்பரப்படுத்தி, உற்பத்தி மற்றும் வருமானத்தை பெருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், தமிழகத்தில் விவசாயிகளால் செயல்படுத்தப்படும் சிறந்த நடைமுறைகளை நிதி ஆயோக் அமைப்பிற்கு தெரியப்படுத்துமாறு வேளாண்துறைக்கு அறிவுறுத்தினார்.