தற்போதைய செய்திகள்

ரூ.14435.25 கோடி வருவாய் இலக்கு – அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்

சென்னை, நவ. 18-

ரூ.14435.25 கோடி வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் பதிவுத்துறையின் அக்டோபர் மாதாந்திர பணி சீராய்வு கூட்டம்  பதிவுத்துறைத் தலைவர் அலுவலகத்தில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி அரசின் வருவாயை உயர்த்துதல் குறித்து ஒரு உத்வேகத்தை ஏற்படுத்த இக்கூட்டம் நடைபெறுவதாக தெரிவித்தார். 2020-21-ம் நிதியாண்டிற்கு அடைய வேண்டிய வருவாய் ரூ.14435.25 கோடி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை முழுமையாக அடைவதற்கான முயற்சியில் முழு கவனம் செலுத்த அனைத்து அலுவலர்களையும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

வருவாய் இலக்கினை அடைவதற்காக நிலுவை ஆவணங்களை சரியாக இருப்பின் உடன் விடுவித்தல், தணிக்கை இழப்புகளை வசூலித்தல், சரியான ஆவணங்களை தாமதமின்றி பதிவு செய்தல் முதலான யுக்திகளை கையாண்டு வருவாய் இலக்கினை அடைந்திட அரசு செயலாளரால் அறிவுறுத்தப்பட்டது.

ஆவணங்கள் பதிவு நாளன்றே திரும்ப வழங்கியுள்ளனரா என்பது குறித்து அமைச்சரால் சீராய்வு செய்யப்பட்டது. 100 சதவீதம் மற்றும் 99 சதவீதம் ஆவணங்கள் ஆவணதாரருக்கு பதிவு நாளன்றே திரும்ப வழங்கப்பட்ட அலுவலகங்கள் குறித்து பாராட்டப்பட்டது. பதிவு நாளன்றே ஆவணங்களை திரும்ப வழங்குவதில் தாமதிக்கும் அலுவலகங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

அமைச்சரால் நிலுவை ஆவணங்கள் குறித்து சீராய்வு செய்யப்பட்டது. அதிகளவில் நிலுவையிலுள்ள அலுவலகங்களை மாதந்தோறும் துணை பதிவுத்துறை தலைவர் மற்றும் மாவட்ட பதிவாளர்கள் திடீராய்வு மற்றும் இதர ஆய்வுகளின்போது கண்டறிந்து நிலுவையினை குறைக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பதிவுத்துறை தலைவரால் அறிவுறுத்தப்பட்டது.

அலுவலகம் மற்றும் சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைத்து பராமரிக்க வேண்டும் எனவும், கோவிட் 19 தொற்று ஏற்படா வண்ணம் கை கழுவும் வசதி ஏற்படுத்தி தருதல், தனி மனித இடைவெளியை உறுதி செய்தல், கிருமி நாசினியை உபயோகப்படுத்துதல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும் எனவும், ஆவணப்பதிவுக்கு வரும் பொதுமக்களுக்கு மனநிறைவான அனுபவத்தினை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் அரசு செயலாளரால் அறிவுறுத்தப்பட்டது.

ஒவ்வொரு அலுவலகத்திலும் தீயணைப்பு கருவியினை முறையாக பராமரிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரை) / தனித்துணை ஆட்சியர் (முத்திரை) ஆகியோர் இந்திய முத்திரை சட்டம் பிரிவு 47 ஏ (1) மற்றும் 47 ஏ (3)- ன் கீழ் நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அரசுக்கு வருவாய் கசிவு ஏற்படா வண்ணம் ஆணைகள் பிறப்பிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

சீட்டு மற்றும் சங்கம் தொடர்பான பணிகள் குறித்து சீராய்வு மேற்கொள்ளப்பட்டது. சீட்டு மத்தியஸ்த வழக்குகளை விரைந்து முடிக்கவும் அமைச்சரால் அறிவுறுத்தப்பட்டது.

இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.