மற்றவை

இயற்கையை ரசிக்கிறோம் என்று உயிரை பணயம் வைக்க வேண்டாம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

சென்னை

பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என்றும் இயற்கையை ரசிக்கிறோம் என்று உயிரை பணயம் வைக்க வேண்டாம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழைக்கு எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கையேட்டினையும், அவசரகால வெள்ளத்தடுப்பு உதவி எண்கள் அடங்கிய தொலைப்பேசி கையேட்டினையும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டார் உடன் பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிருவாக ஆணையர் பணீந்திர ரெட்டி, பேரிடர் மேலாண்மைத்துறை ஆணையர் ஜெகநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டிற்கு, வடகிழக்கு பருவமழைக் காலத்தில் அதிகப்படியான மழை கிடைக்கப் பெறுகிறது. அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் முடிய உள்ள இந்த வட கிழக்கு பருவமழைக் காலத்தில், குறிப்பாக கடலோர மாவட்டங்களில் இந்த பருவமழையின் தாக்கம் அதிகமாக இருப்பதோடு, மாநிலத்தின் இயல்பான மழை அளவில், 47.32 விழுக்காடு மழை அளவு கிடைக்கப் பெறுகிறது.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 28.10.2020 அன்று தொடங்கியது. 28.10.2020 முதல் 16.11.2020 வரையிலான இயல்பான மழையளவு 287.9 மி.மீ. ஆனால் 180.7 மி.மீ. அளவு மட்டுமே பெய்துள்ளது. இது இயல்பான மழையளவைவிட 37 சதவீதம் குறைவாகும். சென்னை, காஞ்சிபுரம், திருப்பூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் விருதுநகர் ஆகிய ஆறு மாவட்டங்களில் இயல்பான அளவும் 31 மாவட்டங்களில் இயல்பைவிட குறைவான அளவும் மழை பெய்துள்ளது.

கடந்த, 11.09.2020 வருவாய் நிர்வாக ஆணையர் அவர்கள் காணொலி காட்சி மூலம் வட கிழக்கு பருவமழை மற்றும் புயல், சூறாவளி காலத்தில் மேற்கொள்ள வேண்டிய ஆயத்த நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஆய்வு கூட்டம் நடத்தி அறிவுரை வழங்கினார்.

36 மாவட்டங்களுக்கும் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களுக்கும் பேரிடர் காலங்களில் கண்காணிப்பு மற்றும் அறிவுரைகள் வழங்குவதற்காக மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள வடகிழக்கு பருவமழை – முன் எச்சரிக்கை நடவடிக்கைள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

தமிழக முதலமைச்சர் அறிவுரைபடி, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து 18.09.2020 அன்று தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் அனைத்து துறை செயலர்கள் மற்றும் தொடர்புடைய மத்திய அரசு உயர் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மேலும் 12.10.2020 அன்று தமிழக முதலமைச்சர் தலைமையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக மேற்கொண்டுள்ள மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் பெருமக்கள் மற்றும் துறை செயலாளர்களுடன் மற்றும் துறை தலைவர்களுடன் விரிவான ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மேலும் 21.10.2020 அன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக மேற்கொண்டுள்ள மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆய்வு செய்தார்.
அவசர காலங்களில் தகவல் தொடர்புக்காக மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையம் (1070) மற்றும் மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு மையம் (1077), tnsmart செயலி மற்றும் சமூக வலைதளம், மின்னணு மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு பேரிடர் குறித்த தகவல்கள் தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஏரிகளை நேரடியாக கண்காணித்து வருகிறோம்வெள்ளத்தணிப்பு நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக முதல்வர் தனி நிதி ஒதுக்கி அதற்கான பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் நோய் தொற்றோடு இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்கிறோம். விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் அடிப்படையில் மக்கள் பாதுகாப்பாக வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள வேண்டும். பண்டிகை காலம் என்பதாலும் வடக்கிழக்கு பருவ மழையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.ஏரிகள் நிரம்பும் பட்சத்தில் உபரி நீரை வெளியேற்றவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நீர் தேங்கும் பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும், செல்ஃபி எடுப்பதை தவிர்க்க வேண்டும். நீர் தேங்கி இருக்கும் பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம். இயற்கையை ரசிக்கிறோம் என்று உயிரை பணயம் வைக்க வேண்டாம்.

மின்னல் படும் இடத்திற்கு செல்ல வேண்டாம். கட்டிடங்களின் பாதுகாப்பு தன்மையை உறுதி செய்ய வேண்டும். இந்திய வானிலை ஆய்வு அறிக்கை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆகவே பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை செம்பரம்பாக்கம் ஏரி குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. நீர் முழுக் கொள்ளளவை எட்டும் பட்சத்தில் உபரி நீரை வெளியேற்ற பொதுப்பணித்துறை தயார் நிலையில் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி முழுவதும் பொதுப்பணித்துறையின் முழுக் கட்டுப்பாட்டிலும், கண்காணிப்பிலும் உள்ளது.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.