பெரம்பலூர்

ஊராட்சி மன்ற தலைவரை பணி செய்ய விடாமல் தடுக்கும் தி.மு.க.வினர்-ஆட்சித்தலைவரிடம் பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.டி.இராமச்சந்திரன் புகார்

பெரம்பலூர், ஜூன் 29-

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொளத்தூர் ஊராட்சி மன்ற தலைவரை பணி செய்ய விடாமல் தி.மு.க.வினர் முட்டுக்கட்டை போடுவதாக ஆட்சித்தலைவரிடம் பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.டி.இராமச்சந்திரன் புகார் அளித்தார்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொளத்தூர் ஊராட்சி மன்றத்தலைவராக கழகத்தை சேர்ந்த வித்யா இளையராஜா உள்ளார். துணைத்தலைவராக தி.மு.க.வை சேர்ந்தவர் இருக்கிறார். இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் வித்யா இளையராஜாவை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் தூண்டுதலின் பேரில் துணைத்தலைவர் மற்றும் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புகுந்து ஆவணங்களை எடுத்துச் சென்றதாக தெரிகிறது.

இதையடுத்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புகுந்து ஆளுங்கட்சியினர் நடத்திய அத்து மீறல்கள் குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆர்.டி.இராமச்சந்திரன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீ வெங்கட பிரியாவை சந்தித்து மனு கொடுத்தார். இந்நிகழ்வின் போது ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கர்ணன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.