தற்போதைய செய்திகள்

269 மகளிர் குழுக்களுக்கு ரூ.5.22 கோடி கடனுதவி – அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்

திருவாரூர்

குடவாசல் தாலுகாவில் 269 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.5.22 கோடி கடனுதவியை அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்திற்குட்பட்ட மருதுவாஞ்சேரி, கடகம்பாடி, வடமட்டம், கூந்தலூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு நேரடி வங்கிக்கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு 269 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5 கோடியே 22 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலான வங்கி கடனுதவியை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியதாவது:-

பெண்கள் முன்னேற்றமே சமுதாய முன்னேற்றம் என்பதை உணர்ந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பெண்களின் முன்னேற்றத்தினை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்ளை தீட்டி செயல்படுத்தினார். அவரது வழியில் செயல்படும் முதலமைச்சர் எடப்பாடியார் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள தொடர்ந்து திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார்.

அந்தவகையில், பெண் விவசாயிகளை ஒருங்கிணைத்து வேளாண் உற்பத்தியாளர் குழு ஏற்படுத்தி அவர்களுக்கு மாநில ஊரக வாழ்வாதார இயக்க இருப்பு நிதியிலிருந்து 15 சதவீதமும், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிலிருந்து 5 சதவீதமும், வேளாண் பொறியியல் துறையிலிருந்து 80 சதவீதம் வழங்கி, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலம் வாடகை இயந்திர மையம் அமைத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், வழங்கப்பட்ட வேளாண் இயந்திரங்களை மிக குறைந்த வாடகைக்கு மற்றவர்களுக்கு வழங்கி அதற்குரிய கட்டணங்களை பெற்று கொள்கின்ற வகையில் வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இதுபோன்று பெண்களின் வாழ்வாதாரம் காக்கப்படுகின்ற வகையில் தொலைநோக்கு பார்வையுடன் கூடிய திட்டங்களை தீட்டி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் ஏழை குடும்பங்கள், சாதாரண குடும்பங்கள், விவசாய குடும்பங்களில் வாழும் பெண்கள் தொழில் தொடங்கி தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்தி கொள்கின்ற வகையில் பல்வேறு வங்கிகடன் பெற்று தரப்படுகிறது. இந்த மாவட்டம் சாதாரண மக்கள் வாழும் மாவட்டமாக இருப்பதால் மிகவும் பயனுள்ள திட்டமாக விளங்குகிறது. அதேபோல் இங்கு வழங்கப்படும் கடனுதவியை செம்மையாக பயன்படுத்தி தங்களது பொருளாதார நிலையை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் பேசினார்.

இந்நிகழ்வில் மகளிர் திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஆசைமணி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கே.கோபால், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பாப்பா சுப்ரமணியன், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராஜேந்திரன், ஒன்றியக்குழு தலைவர் கிளாரா செந்தில், ஒன்றியக்குழு துணைத்தலைவர் தென்கோவன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் சுவாமிநாதன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.