மதுரை

கழகத்தின் வெற்றிக்கு அயராது பாடுபடுவீர் – வி.வி.ராஜன்செல்லப்பா வேண்டுகோள்

மதுரை

தி.மு.க.வின் தில்லுமுல்லுவை முறியடித்து கழகத்தின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது இக்கூட்டத்தில் மதுரை புறநகர் மாவட்ட கழகச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆலோசனை வழங்கி பேசியதாவது:-

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தில் 3 தொகுதிகள் உள்ளன. இதில் திருப்பரங்குன்றம் தொகுதியில் 311 பூத்களும், மதுரை கிழக்கு தொகுதியில் 295 பூத்களும், மேலூர் தொகுதியில் 271 பூத்களும் உள்ளன. தற்பொழுது விரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆணைக்கிணங்க வாக்குச்சாவடி முகவர்கள் சரி பார்க்க வேண்டும்.

குறிப்பாக வருகிற 21 மற்றும் 22 ஆகிய தேதிகளிலும், அதேபோல் அடுத்த மாதம் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளிலும் வாக்காளர் சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் கழக நிர்வாகிகள், இறந்த வாக்காளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த வாக்காளர்களை சரிபார்க்க வேண்டும். குறிப்பாக 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணியில் நீங்கள் ஈடுபட வேண்டும். புதிய வாக்காளர்களை சேர்க்கும் போது நமக்கு அவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

வாக்காளர் சேர்ப்பு முகாம்களில் திமுகவினர் பல்வேறு முறைகேடு செய்வார்கள். அதையெல்லாம் நீங்கள் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். திமுகவினர் என்றைக்கும் நேர்வழியில் செல்ல மாட்டார்கள். குறுக்கு வழியைத் தான் கையாளுவார்கள்.

திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு ஆகிய தொகுதிகளில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இந்த இரண்டு தொகுதிகளிலும் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்றும், நம்மைப் போன்ற கழக நிர்வாகிகள் கோரிக்கை ஏற்றும் முதலமைச்சர் பல்வேறு திட்டப் பணிகளை செய்துள்ளார். ஆனால் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அதை தாங்கள் போராடி பெற்றது போல ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள். அதற்கெல்லாம் நீங்கள் இடம் கொடுக்கக்கடாது.

மக்களிடம் தைரியமாக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் கொண்டு வந்த திட்டங்களை எடுத்துக் கூறுங்கள். மக்களுக்கு நன்றாக தெரியும், தமிழகத்தில் மின்வெட்டு கிடையாது, சட்டம்- ஒழுங்கு சிறப்பாக உள்ளது. மாதம்தோறும் விலையில்லா அரிசி திட்டங்கள், தாலிக்கு தங்கம் திட்டம், மாணவர்களுக்கு மடிகணினி திட்டம், உழைக்கும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம்,

கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை, அது மட்டுமல்லாது அனைத்து கிராமளுக்கும் சாலை வசதி, பாதாள சாக்கடை திட்டம், அதேபோல் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகளை நாம் செய்துள்ளோம். இதையெல்லாம் மக்களுக்கு எடுத்துக்கூறி வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு மற்றும் மேலூர் ஆகிய தொகுதிகளில் இமாலய வெற்றியை கழகத்திற்கு நீங்கள் பெற்றுத்தர அயராது பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.