தற்போதைய செய்திகள்

சுனாமியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வீட்டுமனை பட்டா – அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உறுதி

நாகப்பட்டினம்

சுனாமியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உறுதியளித்துள்ளார்.

நாகப்பட்டினம் நகராட்சி, நாகூரில் நடைபெற்ற அரசு விழாவில் அமிர்தா நகர், பி.எஸ்.என்.எல் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுனாமியால் பாதிக்கப்பட்ட 207 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 83 லட்சத்து 68 ஆயிரத்து 700 மதிப்பிலான விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களையும், வருவாய்த்துறை சார்பில் 150 பயனாளிகளுக்கு ரூ.15000 மதிப்பிலான மாதாந்திர உதவித்தொகை வழங்க ஆணைகளையும்,

2 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பிலான நிவாரணத் தொகைகளையும், சமூக நலத்துறை சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 29 பயனாளிகளுக்கு ரூ.11 லட்சத்து 54 ஆயிரத்து 52 மதிப்பிலான முதிர்வு தொகையையும், தோட்டக்கலைத்துறை சார்பில் பயிர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 35 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 88 ஆயிரத்து 145 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மகளிர் திட்டம் சார்பில் 64 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2 கோடியே 02 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான கடன்தொகைக்கான ஆணையையும்,

வேளாண்மைத்துறை சார்பில் 54 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 17 ஆயிரத்து 747 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், என மொத்தம் 541 பயனாளிகளுக்கு ரூ. 7 கோடியே 12 லட்சத்து 53 ஆயிரத்து 644 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் பிரவீன் பி.நாயர் தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதாவது:-

“புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீனவ சமுதாய மக்களின் வாழ்வில் முன்னேற்றத்தை கொண்டு வர பல சிறந்த திட்டங்களை செயல்படுத்தினார். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழியில் செயல்பட்டு வரும் தமிழக அரசு, சுனாமியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், வீட்டுமனை பட்டாக்கள் வழங்கிட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2016-2017 முதல் 2020-2021 வரையிலான காலத்தில் 37962 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழக அரசு மீனவ சமுதாய மக்களின் மேல் முழுமையான அக்கறை கொண்டு, அவர்களது வாழ்வாதாரத்திற்காகவும், அவர்களது பாதுகாப்பினை உறுதி செய்யவும் தீவிரமாக முயற்சித்து வருகிறது.

நாகப்பட்டினம் மாவட்டம் புயல், பெருமழையால் இயற்கை இடர்பாட்டால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுவரும் மாவட்டமாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடலோர பகுதியில் உள்ள மீனவ மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டம் மீனவ சமுதாய மக்களுக்கு மீன்பிடி துறைமுகங்களில் தன்னிறைவு பெற்ற மாவட்டமாக விளங்குகிறது. மாவட்டத்திலுள்ள பல மீனவ கிராமங்களில் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசினார்.

இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறையின் சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ.60 லட்சம் மதிப்பிலான 4 எண்ணிக்கை 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.இந்துமதி, நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் ரா.பழனிகுமார், தனித்துணை ஆட்சியர் ராஜன், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தலைவர் தங்க.கதிரவன், திருமருகல் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருஷ்ணன், வட்டாட்சியர் ரமாதேவி உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.