தற்போதைய செய்திகள்

பதவி ஆசையில் கழக அரசு மீது வீண்பழி சுமத்துகிறார் ஸ்டாலின் – அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு

மதுரை

பதவி ஆசையில் கழக அரசு மீது ஸ்டாலின் வீண்பழி சுமத்துகிறார் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்தன. இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட கீழமாத்தூர், துவரிமான், அச்சம்பத்து பகுதி விவசாய பெருமக்களுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் கூறினார்.

இதன் பின்னர் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளரிடம் கூறியதாவது:-

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதலமைச்சர் சிறப்பாக எடுத்து வருகிறார். கடந்த 6 மாதமாக கொடிய வைரஸ் நோயை கட்டுப்படுத்தி அதன் மூலம் தமிழக மக்களை காத்தார். தற்போது மழை காலத்தில் மக்களை பாதுகாக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதலமைச்சர் எடுத்து உள்ளார்.

கடுமையான வறட்சி என்றாலும், கடுமையான கனமழை என்றாலும் அதை எளிதில் எதிர்கொண்டு மக்களை காக்கும் நல் அரசாக அம்மாவின் அரசு திகழ்கிறது. ஆனால் ஸ்டாலின் அதை எல்லாம் எண்ணி பாராமல் வீட்டிலேயே முடங்கி காணொலி காட்சி வழியாக அரசுக்கு எதிராக விஷம பிரச்சாரம் செய்கிறார்.

அம்மாவின் அரசு மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். அதை எப்படியாவது சீர்குலைக்க வேண்டும் என்று ஸ்டாலின் திட்டம் போட்டுள்ளார். அவரது திட்டம் ஒரு போதும் நிறைவேறாது. 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பெற்றுத்தந்து ஒரு புதிய புரட்சியை முதலமைச்சர் படைத்துள்ளார். இதையெல்லாம் ஸ்டாலின் கண்ணுக்குத் தெரியாது.

மக்கள் வளமோடு வாழ வேண்டும் என்று அம்மா அரசு திட்டங்களை தந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஸ்டாலினோ பதவி ஆசை வெறியில் அரசு மீது வீண் பழி சுமத்துகிறார். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், முடிவில் தர்மம் வெல்லும் என்ற அடிப்படையில் கழகம் மாபெரும் வெற்றி பெறும். திமுக டெபாசிட் இழக்கும். இந்த தீர்ப்பை மக்கள் நிச்சயம் வழங்குவார்கள்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் ேக.ராஜூ கூறினார்.