சிறப்பு செய்திகள் தமிழகம்

தமிழ்நாடு முதலிடத்துக்கு வருவதை ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை – முதலமைச்சர் பேச்சு

சேலம் 

அனைத்து துறைகளிலும் தமிழகம் முதலிடம் வருவதை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும் தினமும் என்னைப் பற்றி நினைத்தால்தான் அவருக்கு தூக்கமே வருகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், வனவாசியில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்து, பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பேசியதாவது:-

இன்றைக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கின்றது. எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களெல்லாம் வேண்டுமென்றே திட்டமிட்டு, டெல்லியை பார், கேரளாவை பார் என்று குறை சொன்னார்கள். இப்பொழுது நீங்கள் டெல்லியையும், கேரளாவையும் பாருங்கள். ஆனால், இப்பொழுது பார்க்க மாட்டேன் என்கிறீர்கள். கொரோனா வைரஸ் நோய்த் தொற்று தமிழ்நாட்டில் அதிகமாக இருக்கிறதென்றும், கேரளாவிலும், டெல்லியிலும் குறைந்திருக்கிறதென்றும் அன்றையதினம் சொன்னார்கள்.

இன்றைக்கு அந்த இடங்களில் அதிகமாகியிருக்கிறது. அம்மாவின் அரசு சரியான முறையில் நடவடிக்கைகள் எடுத்த காரணத்தினால், கொரோனா நோய்த் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு, படிப்படியாக குறைந்து கொண்டிருக்கின்றது. மற்ற மாநிலங்களில் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், தமிழ்நாட்டில் குறைந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு படிப்படியாக வேளாண் பணிகள் 100 சதவீதம் நடைபெற்று வருகிறது. தொழிற்சாலைகளும் 100 சதவிகிதப் பணியாளர்களுடன் இயங்கி வருகின்றன. படிப்படியாக இயல்பு நிலை திரும்புவதற்கு அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, அதற்கு பலன் கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பதைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு தினந்தோறும் என்னைப் பற்றி நினைத்தால்தான் தூக்கமே வரும். முதலில், இந்த ஆட்சி ஒரு வாரம்கூட தாங்காது, ஒரு மாதம் தாங்காது, 6 மாதம் தாங்காது, ஒரு வருடம் தாங்காது என்று சொன்னார்கள். இப்பொழுது, மூன்றாண்டுகள் நிறைவு பெற்று நான்காவது ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

கழக அரசு சிறப்பான முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் ஜிடிபி 8 சதவிகிதம் இருக்கிறது, வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. கொரோனா வைரஸ் தொற்று இருக்கின்ற காலகட்டத்தில் கூட, புதிய, புதிய தொழிற்சாலைகள் தமிழ்நாட்டிற்கு வருகிறது. கொரோனா வைரஸ் நோய்த் தொற்று ஏற்பட்ட மார்ச் மாதம் முதல் இப்பொழுது வரை அதிகமான தொழிற்சாலைகள் துவங்கிய ஒரே மாநிலம் தமிழ்நாடு தான்.

வேளாண்மையில் முதலிடம், தொழிற்சாலைகள் துவங்குவதில் முதலிடம், சுகாதாரத் துறையில் முதலிடம், கல்வியில் முதலிடம் என எல்லாவற்றிலும் முதலிடத்தில் தமிழ்நாடு வந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஸ்டாலினால் இதனை பொறுக்க முடியவில்லை. ஏதோ பழனிசாமி கிராமத்திலிருந்து வந்திருக்கிறார், இவரால் ஒன்று செய்ய முடியாது என்று நினைத்தார். அனைத்து துறைகளிலும் சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கிறோம், தேசிய விருதுகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம்.

வேண்டுமென்றே திட்டமிட்டு தினந்தோறும் பத்திரிகை மற்றும் ஊடகங்கள் வாயிலாக அறையில் இருந்துகொண்டே ஏதாவது ஒரு அறிக்கை விடுகிறார். ஒரு நாளாவது வெளியில் வந்திருக்கிறாரா? அறையில் இருக்கும்போதுகூட, கையில் உறை, கண்ணாடி அணிந்து கொண்டுதான் இருக்கிறார். அங்கு என்ன வைரஸா வரப் போகிறது? அவர் ஒருவர்தான் தனியாக இருக்கிறார். இங்கே கூட நாம் எல்லாம் இருக்கிறோம். ஆகவே, நாட்டு மக்களுக்கு உழைக்கக்கூடிய ஒரே இயக்கம் நமது கழகம், ஒரே அரசு அம்மா அரசு.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.