சிறப்பு செய்திகள்

கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அகழ்வைப்பகம் – முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், தொல்லியல் துறை சார்பில் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், கீழடி அருகில் கொந்தகை கிராமத்தில், கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை காட்சிப்படுத்திட 12 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள உலகத்தரம் வாய்ந்த அகழ்வைப்பகத்திற்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:-

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், மதுரையிலிருந்து இராமேசுவரம் செல்லும் சாலையில் மதுரைக்கு கிழக்கே 13 கி.மீ. தொலைவில் வைகை ஆற்றின் தென்கரையில் கீழடி கிராமம் அமைந்துள்ளது. இவ்வூரில் உள்ள பள்ளிச்சந்தை திடலில் 110 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தொல்லியல் மேட்டில் இந்திய தொல்லியல் துறை 2014-2015, 2015-2016, 2016-2017 ஆகிய மூன்று ஆண்டுகள் அகழாய்வு மேற்கொண்டது.

இச்சான்றுகளின் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை, கீழடியில் அகழாய்வினை மேற்கொள்ள மத்தியத் தொல்லியல் ஆலோசனைக் குழுவின் அனுமதியினைப் பெற்றது. 2017-2018-ம் ஆண்டு நான்காம் கட்ட அகழாய்விற்கு தமிழ்நாடு அரசால் 55 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அகழாய்வு நெறிமுறைகளின்படி, 2017-2018-ம் ஆண்டில் நான்காம் கட்ட தொல்லியல் அகழாய்வு தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டது. இந்த அகழாய்வில் 5,820 அரிய தொல்பொருட்களும், சங்ககாலம் சார்ந்த செங்கல் கட்டுமானப் பகுதிகளும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

ஐந்தாம் கட்ட அகழாய்வு பணிகளுக்காக தமிழ்நாடு அரசால் 2018-2019-ம் ஆண்டு 47 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்த அகழாய்வில் பல்வேறு வடிவிலான செங்கல் கட்டுமானங்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. மேலும், சுமார் 900 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஆறாம் கட்ட அகழாய்வு பணிகளுக்காக 2019-2020-ம் ஆண்டில், மத்தியத் தொல்லியல் ஆலோசனைக் குழுவின் அனுமதியை பெற்று, கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மணலூர், கொந்தகை மற்றும் அகரம் ஆகிய இடங்களில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையால் ஆறாம் கட்ட தொல்லியல் அகழாய்வுப் பணிகள் முதலமைச்சரால் 19.2.2020 அன்று துவக்கி வைக்கப்பட்டது.

அண்மைக்கால அகழாய்வுகளும், அறிவியல் முறையான காலக்கணிப்புகளும் தமிழ்நாட்டில் ஏறத்தாழ 15 லட்சம் ஆண்டுகளாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பதனை மெய்ப்பிக்கின்றன. தற்போது கீழடி ஆய்வுகள் கி.மு.6-ம் நூற்றாண்டளவில் தமிழகத்தில் மக்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்று தெரிவிக்கிறது. மேலும், இந்தியாவில் கங்கைச் சமவெளி பகுதியில் கி.மு.6-ம் நூற்றாண்டளவில் தோன்றிய இரண்டாம் நகரமயமாக்கம் தமிழகத்தில் காணப்படவில்லை என்ற கருதுகோள் இதுவரை அறிஞர்களிடையே நிலவிவந்தது. ஆனால் கீழடி அகழாய்வு கி.மு.6-ம் நூற்றாண்டளவில் தமிழகத்தில் நகரமயமாக்கம் உருவாகிவிட்டதை நமக்கு உணர்த்துகிறது.

மேற்கண்ட நிகழ்வுகளின் அடிப்படையில், 2013-2014-ம் ஆண்டு முதல் ஆறு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவான தொல்லியல் அகழாய்வுகளின் மூலம் சுடுமண் உருவங்கள், மணிகள், செப்புக் காசுகள், இரும்புப் பொருட்கள், வட்டச்சில்லுகள், ஆட்டக்காய்கள், எலும்பு முனைகள், சுடுமண் காதணிகள், சங்கு வளையல்கள், தந்தத்தினாலான பொருட்கள், தமிழி எழுத்துப்பொறிப்பு கொண்ட பானை ஓடுகள், குறியீடுகள் போன்ற ஏறத்தாழ 14,535 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கீழடியில் உள்ள மிகப் பெரிய தொல்லியல் மேட்டில் நடைபெற்ற மற்றும் நடைபெறுகின்ற அகழாய்வுகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள கட்டுமான அமைப்பானது, இங்கு நகர நாகரிகம் சிறப்புற்று இருந்ததையும், அக்கால பண்பாட்டு வளர்ச்சியினையும் நம் கண் முன்னே காட்டுகிறது.

எனவே, தென்னிந்தியாவில் நிலவிய சங்க கால பண்பாட்டு வரலாற்று ஆய்வில் ஒரு திருப்புமுனைக்கு வித்திட்ட 2,600 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழர் பண்பாடு மற்றும் நகர நாகரிகத்தினை வெளிச்சமிட்டு காட்டியுள்ள கீழடி அகழாய்வுகளின் மூலம் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களைக் கொண்டு, அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த அகழ்வைப்பகத்தினை வருங்கால தலைமுறையினர், மாணவ மாணவியர், அறிஞர்கள், தொல்லியல் வல்லுநர்கள் மற்றும் அயல்நாட்டு வல்லுநர்கள் அறியும் வகையில் அமைப்பது இன்றியமையாததாகிறது.

அதன்படி, சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், கொந்தகை உள்வட்டம், கீழடிக்கு அருகே கொந்தகை கிராமத்தில் 0.81.0 எக்டேர் நிலப்பரப்பில் 12 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை காட்சிப்படுத்திட அமைக்கப்படவுள்ள உலகத்தரம் வாய்ந்த அகழ்வைப்பகத்திற்கு முதலமைச்சர் நேற்று காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

கீழடியில் உலகத்தரம் வாய்ந்த நவீன வசதிகளுடன் கூடிய அகழ்வைப்பகம் அமைக்கும் பணியானது தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறையின் புராதன கட்டடங்கள் பாதுகாப்புப் பிரிவு (Heritage Wing) மூலமாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப்பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன், தலைமைச் செயலாளர் க.சண்முகம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் விக்ரம் கபூர், தொல்லியல் துறை ஆணையர் / முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.