தற்போதைய செய்திகள்

சேலம் மேக்னசைட் நிறுவனம் திறக்கப்பட்டதால் நாட்டின் பொருளாதாரம் உயரும் – முதலமைச்சர் நம்பிக்கை

சென்னை

சேலம் மேக்னசைட் நிறுவனம் திறக்கப்பட்டதால் நாட்டின் பொருளாதார நிலை உயரும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் வனவாசியில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-

ஏற்கனவே மூடப்பட்டிருந்த தமிழ்நாடு மேக்னசைட் லிமிடெட் நிறுவனமும் இன்றைய தினம் (நேற்று) திறக்கப்பட்டுள்ளது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் 6.2.1979 அன்று இந்த மேக்னசைட் நிறுவனத்தை துவக்கினார். இது ஒரு அரசு பொதுத் துறை நிறுவனம். இதனுடைய ஆண்டு வருமானம் ரூபாய் 100 கோடி. சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், தாத்தையங்கார்பட்டி கிராமத்தில் அமைந்த அரசு மேக்னசைட் சுரங்கத்தில், மேக்னசைட் மற்றும் டியூனைட் கனிமங்கள் இயந்திர மயமாக்கப்பட்ட திறந்தவெளி சுரங்கத்தில் வெட்டி எடுக்கப்படுகிறது.

இந்தியாவில் ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கிடைக்கும் அரிய வகை கனிமம் மேக்னசைட் ஆகும். நம் நாட்டின் மொத்த மேக்னசைட் கனிம வளத்தில் 70 சதவிகிதம் தமிழ்நாட்டில், அதாவது சேலம் மாவட்டத்தில் கிடைக்கப் பெறுகிறது. இரும்பு மற்றும் ரசாயன தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் அத்தியாவசியமான வெப்பம் தாங்கும் உலை, சுவளைக் கற்கள் உற்பத்தி செய்ய இக்கனிமம் உருவாக்கப்படுகிறது. இதனோடு இணைத் தனிமமாகக் கிடைக்கும் டியூனைட்டும் இரும்புத் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்நிறுவனம் தன் இரு வேறு தொழிற்சாலைகளில் மேக்னசைட் தனிமத்தை முழு எரியூட்டப்பட்ட மேக்னசைட் மற்றும் மித எரியூட்டப்பட்ட மேக்னசைட் என்ற மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி விற்பனை செய்கிறது.

2018-ம் ஆண்டில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் வேண்டிய சுரங்கப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. இதற்காக மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு விண்ணப்பிக்கப்பட்டு, குறிப்பு விதிமுறைகள் பெறப்பட்டு 29.1.2020 அன்று பொதுமக்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டு மாநில சுற்றுச்சூழல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், புவியியல் மற்றும் சுரங்கத் துறைக்கு இழப்பீடாக ரூபாய் 72 கோடி செலுத்தப்பட்டு தடையில்லாச் சான்று பெறப்பட்டது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டு, 10.11.2020 அன்று மாசுக்கட்டுப்பாடு வாரியத்திடமிருந்து சுரங்கம் செயல்பாடு ஒப்புதல் பெறப்பட்டது.

இன்றையதினம் இச்சுரங்கப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன என்ற செய்தியை இந்த நேரத்தில் தெரிவிக்க விரும்புகிறேன். சுரங்கப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டதால் 534 தொழிலாளர்கள் நேரடியாகவும் 2000 தொழிலாளர்கள் மறைமுகமாகவும் பயனடைகிறார்கள். இனி, இப்பகுதி மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கும், மேக்னசைட் இறக்குமதி குறைவதினால் நாட்டின் பொருளாதாரம் உயர்வதற்கும் வழிவகுக்கும்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.