தற்போதைய செய்திகள்

நெல் கொள்முதலில் அம்மா அரசு சாதனை – முதலமைச்சர் பெருமிதம்

சேலம்

23 லட்சம் மெட்ரிக் டன் எங்கே? 32 லட்சம் மெட்ரிக் டன் எங்கே? என்றும் நெல் கொள்முதலில் அம்மாவின் அரசு சாதனை படைத்துள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், வனவாசியில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்து, பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பேசியதாவது:-

ஒரு சொட்டு நீர் கூட வீணாகக் கூடாது என்பதற்காக நீர் மேலாண்மைத் திட்டத்தின் மூலமாக அம்மாவின் அரசு சிறப்பான முறையில் செயல்பட்டதன் விளைவாக 2019-2020ல் இந்திய அளவிலே தேசிய விருதைப் பெற்றிருக்கின்றோம். இந்தத் துறையில் மட்டுமல்ல, பல துறைகளில் தேசிய விருதுகளை பெற்று சாதனை படைத்த அரசு எங்களுடைய அரசு என்பதை பெருமிதத்துடன் தெரிவிக்க விரும்புகிறேன்.

நீர் மேலாண்மைத் திட்டத்தின் மூலமாக, ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டன, கால்வாய்கள் நவீனமாக்கப்பட்டன. நீரை சிக்கனமாக பயன்படுத்தக்கூடிய சூழ்நிலையை நாங்கள் உருவாக்கித் தந்தோம். அதன் மூலமாக, என்றைக்கும் இல்லாத அளவிற்கு இன்றைக்கு டெல்டா மாவட்டப் பகுதிகளில் அரசு கொள்முதல் நிலையத்தில் 32 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து சரித்திர சாதனையை அம்மாவின் அரசு படைத்திருக்கின்றது.

கடந்த காலங்களில் 23 லட்சம் மெட்ரிக் டன் நெல் தான் அரசு கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்தார்கள். 23 லட்சம் மெட்ரிக் டன் எங்கே? 32 லட்சம் மெட்ரிக் டன் எங்கே? ஆகவே, அம்மாவின் அரசு எந்த அளவிற்கு சிறப்பான முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.