தற்போதைய செய்திகள்

முதல்வர் எடப்பாடியார் தலைமையில் மீண்டும் நல்லாட்சி அமைப்போம் -பொள்ளாச்சி வி.ஜெயராமன் சூளுரை

திருப்பூர்:-

மக்கள் நலனுக்காகவே மட்டும் செயல்படும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் மீண்டும் நல்லாட்சி அமைப்போம் என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் சூளுரைத்தார்.

திருப்பூர் மாநகர் மாவட்ட கழகம் சார்பில், திருப்பூர் மாவட்ட கழக செயலாளர் பதவியேற்பு விழா, நிர்வாகிகள் அறிமுகக்கூட்டம் திருப்பூர் காயத்திரி மகாலில் நடைபெற்றது.

திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன், கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.பி.,யுமான சி.சிவசாமி, திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி,.ஆர், இளைஞரணி செயலாளரும், திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., வுமான சு.குணசேகரன், திருப்பூர் ஒன்றிய கழக செயலாளரும், திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ.,வுமான கே.என்.விஜயகுமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவைத்தலைவர் பழனிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ, என்.எஸ்.என்.நடராஜன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

இந்நிகழ்ச்சியில், திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள துணை சபாநாயகர் பொள்ளாச்சி வெ.ஜெயராமன் பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு கழக நிர்வாகிகள் சிறப்பாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசும்போது கூறியதாவது:-

எளிய தொண்டனான என்னைகழகத்தின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் மாவட்ட செயலாளராக நியமித்து அனுப்பினார்கள். உண்மையான கழக நிர்வாகிகள் மண்புழு மண்ணைப் பதப்படுத்துவது போல, கழகத்துக்காக உழைப்பவர்கள் ஆவர். கட்சிக்காக, அம்மா அவர்களின் விசுவாசத்துக்காக, முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் என்ன சொன்னாலும் அதை செய்யக் கூடியவர்களே உண்மையான தொண்டர்கள்.

இதனால் தான் சட்டமன்றத்தில் அம்மா சொன்னபோது, ‘ எனக்கு பிறகும் இந்த ஆட்சியும், கழகமும் நூறாண்டுகள் தமிழக மக்களுக்காக உழைக்கும்’ என்று கூறினார். அதுமட்டும் இல்லாமல் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து இருந்த ஸ்டாலினை பார்த்து, நான் அமர்ந்த இந்த நாற்காலியில், எனக்கு பிறகும் கூட ஒருநாளும் உங்களை அமர விட மாட்டேன் என்று சபதமிட்டார்கள். அம்மாவை நேசிப்பவர்கள் அம்மா அவர்கள் தந்த இந்த வாழ்க்கையை உணர்ந்து இந்த கழகத்துக்காக பாடுபட வேண்டும். 2016-ல் அம்மா அவர்கள் நினைத்திருந்தால் சிங்கப்பூருக்கோ, இல்லை அமெரிக்காவுக்கோ சென்று சிகிச்சை பெற்று இருக்க முடியும். ஆனால் கழகம் தான் முக்கியம் என்று பாடுபட்டார். கழகத்துக்காவே தன்னை அர்ப்பணித்தார்.

அப்படிப்பட்ட அம்மா அவர்களின் ஆட்சி 2021 லும் அமைய வேண்டும். அதற்காக நாம் அயராது பாடுபட வேண்டும். திருப்பூர் தெற்கு, வடக்கு காங்கேயம் ஆகிய 3 தொகுதிகளிலும் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நாம் வெற்றிபெற வேண்டும்.
7.5 சதவீத இட ஒதுக்கீடு பெற்றுத்தந்த முதலமைச்சர் எடப்பாடியார் அவர்கள்.

இந்த வரலாற்று சாதனையால் திருப்பூர் கே.எஸ்.சி., பள்ளி, ஜெய்வாபாய் பள்ளி, மற்றும் பழனியம்மாள் பள்ளி மாணவ-மாணவிகள் மருத்துவப் படிப்புக்கு சேர்க்கப்பட்டு உள்ளனர். எல்லோரும் மக்கள் நலன் என்று சொல்வார். ஆனால் எடப்பாடியார் மட்டும் தான் மக்கள் நலன் மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுவார். எனவே அவரை மீண்டும் 2021-ல் அம்மா ஆட்சி அமைத்தே தீருவோம் என்று சபதம் ஏற்று பணிபுரிய வேண்டும்.

இவ்வாறு துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசினார்.