தற்போதைய செய்திகள்

சூரனை வதம் செய்தார் முருகப் பெருமான்

தூத்துக்குடி

திருச்செந்தூர் கடற்கரையில் குறைவான பக்தர்கள் மத்தியில் நேற்று சூரனை முருகப்பெருமான் வதம் செய்தார்.

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பல்வேறு விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.

ஆண்டுதோறும் சூரசம்ஹார நிகழ்ச்சியின்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.ஆனால், இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் சூரசம்ஹார நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை. குறைவான எண்ணிக்கையிலேயே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

நேற்று மாலை 40.30 மணிக்கு திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி தொடங்கியது. சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளினார். கடற்கரையில் சூரனை வதம் செய்யும் வேல், பூஜைகள் செய்யப்பட்டு சஷ்டி மண்டபத்திற்கு எடுத்து வரப்பட்டது.

அதனைத்தொடர்ந்து யானை முகம் கொண்ட தாரகாசூரன், சிங்கமுகாசூரன் ஆகியோர் வதம் செய்யப்பட்டனர். இதையடுத்து, பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்தார். இறுதியில் மாமரமும், சேவலுமாக உருமாறி வந்த சூரபத்மனை சேவலும், மயிலுமாக மாற்றி சுவாமி ஆட்கொண்டார். மயிலை தனது வாகனமாகவும், சேவலை தனது கொடியாகவும் ஏற்றுக் கொண்டார் முருகப்பெருமான்.

இந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில்ராஜ், ஐ.ஜி.முருகன், டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபினபு, மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு ஜெயக்குமார், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணு சந்திரன், திருச்செந்தூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங், சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் காலோன், உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரித்திவிராஜ், தக்கார் கண்ணன் ஆதித்தன், திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனப்பிரியா, இணை ஆணையர் கல்யாணி, உதவி ஆணையர் செல்வராஜ், வட்டாட்சியர் முருகேசன், முன்னாள் தக்கார் கோட்டை மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு பணியில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவின் பேரில் திருச்செந்தூர் ஏ.எஸ்.பி.ஹர்ஷ் சிங் மேற்பார்வையில் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட்டனர்.