தமிழகம்

விவசாயிகள் இரட்டிப்பு வருமானம் பெறும் சூழ்நிலையை அரசு உருவாக்கித் தரும் – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி

திருச்சி

முசிறியில் ஐ.ஐ.டி மூலம் வாழையின் மூலபொருளை வைத்து பல்வேறு பொருட்கள் தயாரிக்க அரசு பரிசீலனை செய்து வருவதாகவும், விவசாயிகள் இரட்டிப்பு வருமானம் பெறும் சூழ்நிலையை அரசு நிச்சயம் உருவாக்கித் தரும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொட்டியம் மற்றும் முசிறி ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதாவது.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்றிருந்த காலத்திலே, ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களைத் தந்தார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் மக்களுக்காக வாழ்ந்து மறைந்தார்கள். அந்த இரு பெரும் தலைவர்களும் மக்களுக்கு வாரி வாரி வழங்கினார்கள். அதனாலேயே இன்றைக்கும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இன்றைக்கு எதிர்கட்சியாக இருந்தாலும் சரி, புதிய கட்சி தொடங்கினாலும் சரி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பெயரை உச்சரிக்காமல் மக்களை சந்திக்க முடியாது. எம்.ஜி.ஆர் அவர்களின் மறைவுக்குப் பிறகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பல்வேறு சோதனைகளைக் கண்டார்.

அனைத்து சோதனைகளையும் சாதனையாக மாற்றிக் காண்பித்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். 2011 முதல் 2020 வரை பொற்கால ஆட்சியை தந்துள்ளோம். ஏழை, எளிய மக்கள் பொருளாதாரத்தில் உயரவேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை வகுத்துத் தந்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். அம்மா அவர்கள் வகுத்த திட்டங்களை சிந்தாமல் சிதறாமல் உங்களிடத்திலே எடுத்துச் சென்று வருகிறது அம்மாவின் அரசு.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் இந்தியாவிற்கே முன்னோடியாக திகழ்ந்த மாநிலம் தமிழ்நாடு. கொரோனா காலத்திலும் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக ரூ.1000 உதவித்தொகை வழங்கிய ஒரே அரசு அம்மாவின் அரசு. அதுமட்டுமல்லாது 8 மாத காலங்கள் நியாயவிலைக்கடைகள் மூலம் விலையில்லாமல் அத்தியாவசிய பொருட்களை வழங்கிய அரசும் அம்மாவின் அரசு தான்.

இங்கே பேசும்போது பலர் சொன்னார்கள். இந்த பகுதி வாழை அதிகமாக பயிரிடப்படும் பகுதி. ஆகவே இந்த வாழையில் இருந்து வேறு ஏதாவது செய்ய முடியுமா என்று நான் சிந்தித்த போதுதான், மயில்சாமி அண்ணாதுரை என்னை சந்தித்தார். அவர் இந்த வாழையை மூலப்பொருளாக கொண்டு பல்வேறு பொருள்கள் தயாரிக்கலாம் என்று என்னிடத்திலே தெரிவித்தார்.

அவர் இது குறித்து ஆராய்ச்சியிலே ஈடுபட்டு, இன்றைக்கு ஒரு தொழிற்சாலை பணியை துவக்கி இருக்கின்றது. வாழை மரம் வெட்டப்படுகின்ற போதும், புயல் வரும் போதும் சேதாரம் ஆகிவிடுகிறது. இப்படிப்பட்ட காலக்கட்டத்தில் அந்த பட்டையில் இருந்து துணி நெய்யலாம் என்றும், அதில் இருந்து நீர் எடுக்கலாம் என்றும், அது நல்ல விலைக்கு போகும் என்றும், அதன் தண்டில் இருந்து பிஸ்கட்டுகள் தயாரிக்கலாம் என்றும் சொன்னார்.

ஆக வாழையை பயிரிடும் விவசாயிகள் என்றைக்கும் நஷ்டம் ஆகக்கூடாது என்பதற்காக இந்த திட்டத்தை அம்மாவின் அரசு உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றது. ஏற்கனவே ஒரு நிறுவனம் இதில் புதிய கண்டுப்பிடிப்புகள் செய்துகொண்டிருக்கிறார்கள். நாமும் நம்முடைய மாநிலத்திலே விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்த கருத்தின் அடிப்படையில், ஐ.ஐ.டி. மூலமாக வாழை பயிரிடுகின்ற அந்த பகுதிகளிலே இதை கொண்டுவந்து வருங்காலத்தில் விவசாயிகள் இரட்டிப்பு வருமானம் பெருகின்ற சூழ்நிலையை இந்த அரசு உருவாக்குவோம்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.