சிறப்பு செய்திகள்

மனு கொடுத்த 2 நாட்களில் அரசு வேலை முதலமைச்சருக்கு மாற்றுத்திறனாளி நன்றி

நாமக்கல்

மனு கொடுத்த 2 நாட்களில் அரசு வேலை வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிச்கு மாற்றுத்திறனாளி வாலிபர் நன்றி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 18.11.2020 அன்று கோவையிலிருந்து சேலம் செல்லும் வழியில் குமாரபாளையத்தில் மாற்றுத்திறனாளி ப.சாதிக் பாஷா கோரிக்கை மனுவுடன் நின்று கொண்டிருந்ததை பார்த்தவுடன் தனது வாகனத்தை நிறுத்தி, மாற்றுத்திறனாளி ப.சாதிக் பாஷா விடமிருந்து கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டார்.

இந்த மனுவில் சாதிக் பாஷா, தான் 12-ம் வகுப்பு படித்துள்ளதாகவும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு மற்றும் எம்.எஸ்.ஆபிஸ், டேலி ஆகியவற்றையும் படித்துள்ளதாக தெரிவித்திருந்தார். தான் மாற்றுத்திறனாளியாக இருப்பதால் தனக்கு பணி வழங்க யாரும் முன்வரவில்லை என்றும், தனக்கு ஒரு வேலைவாய்ப்பு வழங்குமாறும் தனது கோரிக்கை மனுவில் தெரிவித்திருந்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் உத்தரவின்படி, மாற்றுத்திறனாளி ப.சாதிக் பாஷாவுக்கு குமாரபாளையம் நகராட்சி பொது சுகாதார பிரிவில் கணினி பணியாளர் பணிக்கான ஆணையை கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி, குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கா.மெகராஜ், திருச்செங்கோடு கோட்டாட்சியர் ப.மணிராஜ், வட்டாட்சியர் தங்கம், நகராட்சி ஆணையாளர் சி.ஸ்டான்லி பாபு, நகராட்சி பொறியாளர் சுகுமார் உள்பட அரசு அலுவலர்கள், கூட்டுறவாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

அரசு பணிக்கான ஆணை பெற்ற மாற்றுத்திறனாளி ப.சாதிக் பாஷா முகமலர்ச்சியுடன் கூறுகையில்,18.11.2020 அன்று முதலமைச்சர் அவர்கள் கோவையிலிருந்து சேலம் செல்லும் போது அவர்களிடம் வேலைவாய்ப்பு வழங்குமாறு கோரிக்கை மனு அளித்ததன் அடிப்படையில், முதலமைச்சரின் உத்தரவின்படி எனக்கு குமாரபாளையம் நகராட்சியில் கணினி பணியாளராக பணி வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சருக்கு எனது குடும்பத்தின் சார்பிலும், மாற்றுத்திறனாளிகளின் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.